Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

  ஸ்லோகம் 1 விநாயகர் வணக்கம்

ஸதா பாலரூபாபி ,விக்னாத்ரி ஹந்த்ரீ,
 மஹாதந்தி வக்த்ராபி, பஞ்சாஸ்ய மான்யா,
வதீந்ராதிம்ருக்யா, கணேசாபிதா மே,
 விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி:

குழந்தை வடிவிலேயே எப்பொழுதும்,நிலைத்திருப்பினும்
மாபெரும் மலைகள் போலெழும், தடைகளை தகர்க்கின்றவரும்,
நீண்ட தந்தங்களுடைய யானை முகத்தினரும், ஐம்முக சிவனாலும்
ஆராதிக்கப் படுகின்றவரும், பிரம்மன் இந்திரன் முதலிய தேவர்கள
அனைவராலும் தேடப்படுகின்றவரும், வர்ணணைகளுக்கு
எட்டாதவரும், கணேசன் என்ற பெயருடையவருமான அந்த
மங்களகரமானவர், எனக்கு செல்வத்தை வழங்கட்டும்."

கவலைகள் என்றால் என்னவென்றறியாத கணேசன் மற்ற
எவருடைய கவலைகளையும் போக்கடிப்பதில் வல்லவர்.
குழந்தைகள் போல எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதால்
குழந்தை உருவிலேயே விளங்கி கொண்டிருக்கிறார். செயல்
எதுவானாலும், எப்படிபட்டதானாலும் அதை விரைவில் செய்து
முடிக்கும் பேராற்றல் பெற்ற ஒரு அதிசய குழந்தை.தன்னை
துதிக்கின்றவர்களுககு ஏற்படும் அனைத்துவித தடைகளையும்
அகற்றி வெற்றியை அடைய செய்கிறார்.ஆஸ்யம் என்ற சொல்லுக்கு
முகம் என்று பொருள். பஞ்சாஸ்யம் என்பதால் ஐந்து முகங்கள்
கொண்ட சிவபெருமானை குறிக்கிறது. சிவனுக்கும் சில நேரங்களில்
இவருடைய தயவு தேவைபடுகிறது. மேலும் பஞ்சாஸ்யம் எனறு
சிங்கத்திற்கு பொருள் கொள்ளலாம்.பொதுவாக யானைகள்
சிங்கத்தை கண்டால் பயந்து ஓடிவிடும். ஆனால் யானைமுக
கணேசனை கண்டாலோ சிங்கங்கள் பணிந்து துதிக்கின்றன.
பிரம்மன்,இந்திரன் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள் தங்களது
முயற்சிகளில் வெற்றி பெற இவரைத்தான் தேடி வரவேண்டியிருக்கும்.
இவரையோ இவரது மகிமைகளையோ முழுமையாக வர்ணிப்பதென்பது
இயலாத காரியம். வினாயகரை துதித்துவிட்டுதான் மற்ற தெய்வங்களை
துதிக்கவேண்டும் என்பது தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. இதை அனுசரித்துதான் சங்கர பகவத்பாதாள் முதல்
ஸ்லோகத்தில் கணேசன் என்ற பெயருடைய மங்கள மூர்த்தியை
வணங்கிவிட்டு ஏனய முப்பத்து இரண்டு ஸ்லோகங்களால்.
செந்திலாண்டவனை போற்றி துதிக்கிறார்.



சுப்ரமண்ய புஜங்கம்

  ஸ்லோகம் 2 கவிதைகள் இயற்றும் அறிவு

" நஜானாமி சப்தம், நஜானாமி சார்த்தம்
     நஜானாமி பத்யம், நஜானாமி கத்யம்,
சிதேகா ஷடாஸ்யா, ஹ்ருதி த்யோததே மே,
     முகாந் நிஸ்ஸரந்தே, கிரஸ்சாபி சித்ரம்."

நான் சப்தம் அறிந்தவனல்ல, அதன் பொருள் அறிந்தவனல்ல,
பத்யம் அறிந்திலேன் கத்யமும் அறிந்திலேன். ஆயினும்
ஆறு முகங்களுடன் ஞான ஜோதி ஒன்று எனது இதயத்தில்
தோன்றி யதால், வாக்குகள் சப்திக்கபட்டு வெளிவருகின்றன.

பாக்கள், பாடல்கள் மற்றும் கவிதைகள் இயற்றுவதற்கு அவைகளுக்கென
ஏற்பட்டுள்ள இலக்கண அறிவு மிகவும் அவசியம்.ஓசை நயம், சொல்
நயம், சொற்கள், சொல்லவேண்டிய முறை, எதுகை மோனை
என்றெல்லாம் ஆராய்ந்து இலக்கண விதிப்படி கவிதைகள்
இயற்றுவதென்பது பேரறிவு பெற்ற கவிஞர்களால்தான் இயலும்.
திருமுருகன் அருள் கவிதைகள் இயற்றும் வல்லமையை வழங்கும்.
இந்த ஸ்லோகத்தை மட்டும் ஜபிக்கின்றவர்களுக்கு முருகன்
அருளால் வியன்மிகு கவிதைகள் இயற்றும் வாய்புகள் வந்தடையும்.
ஊமையாய் பிறந்த குமரகுருபரர், செந்திலாண்டவன் அருளால்
பேசும் சக்தி பெற்று, மாபெறும் கவிஞராகி பகழ் கொண்டார். இது
போன்ற எத்துனையோ அதிசயங்கள் செந்தில் முருகன் சன்னதியில்
அரங்கேறியிருக்கின்றன.பரமசிவனின் அவதாரமாய் புவியில்
தோன்றி உலவிய ஆதிசங்கரர் வடமொழியில் பாண்டித்யம்
பெற்ற மாபெரும் கவிஞர்.ஆயினும் முருகன் சன்னதியில் தன்னை
ஒரு சாதாரணமான பக்தனாக தாழ்திக் கொண்டு துதிக்கின்றார்.இது
சங்கரரின் வினய பாவம் அல்லது அவையடக்கத்தை காட்டுவதுடன,
அகந்தை அகன்ற மனதில்தான் ஆண்டவன் தோன்றுகிறான்
என்பதை தெளிவுபடுத்துகிறது. வழிபட வேண்டும் எனற எண்ணம்
தோன்றியக் கணமே, சங்கரர் இதயத்தில் ஆறுமுகத்துடன் ஞான
ஜோதியாக செந்தல் வேலன் உதித்ததனால் சொற்கள் கடல் மடை
திறந்த வெள்ளம் போல வெளிவந்தன.அதாவது முருகனே
இதயத்தில் எழுந்து தனது சொற்களால் தன்னை தானே துதித்து
கொள்வதாக கருத வேண்டியிருக்கிறது.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 3 செந்தில் முருகன் காட்சி.

" மயூரா திரூடம், மஹாவாக்ய கூடம்
   மனோஹாரி தேஹம், மஹச்சித்த கேஹம்
மஹீ தேவதேவம், மஹாவேத பாவம்
 மஹாதேவ பாலம் பஜே லோகபாலம் ",

மயில் வாகனத்தில் ஏறுகின்றவரும், மஹாவாக்யங்களின்
உட்கருத்தானவரும், மனதை வசீகரிக்கும் அழகிய தேகத்தினரும்,
மஹான்களின் இதயத்தை தனது இருப்பிடமாக்கி கொண்டவரும்,
வேதவிற்பன்னர்களால் ஆராதிக்கபடுகின்றவரும், உபநிடதங்களின்
பொருளாய் திகழ்கின்றவரும், பரமசிவனின் புத்திரரும், உலகங்களை
காத்தருள்கின்வருமாகிய உம்மை வணங்குகிறேன்.

வேலும் மயிலும் துணை செய்ய, குருவாய் வருவாய் அருள்வாய்
குகனே. மயிலேறி விளையாடும் முருகன் வேலலெடுத்து
வேதனைகளை போக்குகின்றவன். மனமே மயில் வாகனம்.
நமது மனதில் புகுந்து ஆட்கொள்ளும் கெட்டிக்காரன்." அஹம்
ப்ரஹ்மாஸ்மி", " தத்வமஸி" போன்ற உபநிடத வாக்கியங்களின்
உட்பொருளாக திகழ்கிறான். ரிக்,யஜுர்,சாம,அதர்வண எனும்
நான்கு வேதங்களின் சாரமே உபநிடதங்கள். இந்த நான்கு வேதங்களே
மயில் வடிவெடுத்து முருகனுக்கு சேவை செய்கின்றன. முருகு என்ற
தமிழ் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.எவரையும் கவர்ந்து
வசீகரித்து வசியம் செய்துவிடும் பேரழகு செம்மேனியனே முருகன்..
முனிவர்களின் இதய குகையில் வசிப்பதால் குகன் எனறு பெயர்
கொண்டான். வேதங்களை ஆராய்கின்றவர்கள் முருகனைத்தான்
உபாசனா தெய்வமாக கொள்கிறார்கள.பரமசிவனின் மகன்.
தந்தைக்கே பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருநாதன். அனைத்து
உலகங்களையும் காத்து இரட்சிக்கின்றவன்.இவ்வாறு செந்தில்
சுப்ரமண்யனை,சங்கரர் போற்றி துதிக்கறார்.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 4 பிறவிப் பிணியகலும்.

" யதா ஸந்நிதானம் கதா மானவா மே,
   பவாம்போதி பாரம் கதாஸ்தே ததைவ,
 இதி வ்யஞ்ஜயன் ஸிந்துதீரே ய ஆஸ்தே,
  தமீடே பவித்ரம், பராசக்தி புத்ரம்."

எப்பொழுது மனிதர்கள் எனது சன்னதியை அடைகிறார்களோ
அப்பொழுதே, அவர்கள் சம்சாரக்கடலின் கரையை அடைந்து
விடுகிறார்கள் என்று சுட்டி காட்டுவது போல சமுத்திரக்கரையில்
வசிக்கின்றவனும், பக்தர்களின் பாவங்களை போக்குகின்றவனும்,
பராசக்தியின் புத்திரனுமான முருகா, உன்னை துதிக்கிறேன்.

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே .ஆதிசங்கரர் முருகன்
முன் நின்று கொண்டு, திருச்செந்தூரில் புஜங்கம் பாடி துதித்தார்.
திருச்செந்தூர் மிகவும் பழமை வாய்த புனித தலம். இரண்டாயிரம்
ஆண்டுகள் அல்லது அதற்கும் முன்பிருந்தே விளங்கி வரும் அழகிய
நகர்.ஆரவாரத்துடன் அலைகள் கரை அடைவதை காண்பது
ஆச்சரியமாக இருக்கும். அக்காரணம் கொண்டு நக்கீரர் திருச்சீரலைவாய்
என்று பெயரிட்டார்.கடற்கரையை ஒட்டி மற்ற எத்துனையோ
இடடங்களில் கடல் புகுந்து ஆக்ரமித்து கொண்டுவிட்டாலும்,
முருகன் கோவிலுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. அனைத்தையும்
அடக்கி ஆள்கின்ற ஆறுமுகனுக்கு கடலும் அடங்தானே வேண்டும்.
" பிறவிப் பெருங்கடல் நீந்துவர்,நீந்தாதார் இறைவனடிசேராதார் ",
( திரு வள்ளுவர் ) இறைவனை விடாது வழிபடுகின்றவர்கள்
பிறவி பெருங் கடலை எளிதில் நீந்தி கரை ஏறி விடுவார்கள்.அதிலும்
ஆறுமுகனை ஆராதிக்கின்றவர்கள தாங்கள்மட்டுமல்ல மற்றவர்களையும் கரையேற்றி விடுவார்கள. தனது சன்னதிக்கு
எப்பொழுது பக்தர்கள் வந்து தரிசிக்கிறார்களோ,அப்பொழுதே
அவர்கள் பிறவி பெருங்கடலை எளிதாக நீந்தி கடந்து கரையேறி
விடுவார்கள் என்பதை எடுத்து காட்டுவது போல , முருகன்
கடற்கரையில் வசித்து வருகிறான்.பராசக்தியின மைந்தனும்,
பக்தர்களின் பாவங்களை போக்கி காப்பாற்றுகின்றவனுமாகிய
அந்த செந்தில் முருகனை இவ்வாறு சங்கரர் வியந்து துதிக்கிறார்.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 5 துயரங்கள் நீங்கிடும்.

" யதாப்தேஸ் தரங்கா:லயம் யாந்தி துங்கா:
  ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே
இதீவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்ஸயந்தம்
 ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்."

உயரமான சமுத்ர அலைகள், எவ்வாறு தனது ஆலயவாயிலை
அடைந்ததும் அழிகின்றனவோ, அவ்வாறே பக்தர்களின் பேராபத்துகள்
தனது ஆலயவாயிலுக்கு வந்ததுமே அழிந்துவிடுகினறன என்பதை
அலைகளை காட்டுவதன் மூலம் உணர்த்துகின்ற குஹன் முருகனை
இதயத்தாமரையில் தியானிக்கின்றேன்.

எவையெவைகளை இன்பங்கள் என்று ஏற்றுக்கொண்டு, அவைகளை
நாடி தேடிச் சென்று அனுபவித்தாலும், பின்நாட்களில் அவைகள்
நம்மை துன்பக் கடலுக்கு அழைத்துச் சென்று அதில் நம்மை நன்கு
அமிழ்த்திவிடுகின்றன. இது யாவரும் அனுபவித்தறிந்த உண்மை.
துன்பங்களும், துயரங்களும் நிறைந்த வாழ்வில் நிம்மதி காண
இறைவழிபாடு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அமைதியும்,
ஆறுதலும், நிம்மதியும் அளித்து பக்தர்களை காத்தருள்வதில்
முருகனுக்கு இணை முருகனே. காரணங்கள் எதுவாயினும்,
கண்டறிந்து கரையேற்றுவதில் கந்தன் தனித்தன்மை கொண்ட
திறமைசாலி. கசந்து தவிக்கும் மனதிற்கு, தித்திக்கும் தேனமுதாய்
திகழ்கின்றவன். " பத்தித் திருமுக மாறுடன், பன்னிரு தோள்களுமாய்
தித்தித் திருக்கும் அமுது கண்டேன் " ( கந்தர் அலங்காரம்- கவி 47 )
இன்றய நாகரீக வாழ்வில் விபத்துகளும்,ஆபத்துகளும் சாதாரண
சம்பவங்களாகி விட்டன. ஆலயவாயிலை அடைந்ததுமே அலைகள்
அடங்கி அமைதியாவது போல, பக்தர்களுக்கு ஏற்படும், ஏற்படவிருக்கும்
அனைத்து ஆபத்துகளும் அவர்கள் ஆலயத்தை நெருங்கியதுமே
அழிந்துவிடுகின்றன. இந்த உண்மையை உபதேசிப்பது போல
செந்தூரில் கோவில் கொண்டிருக்கும் குகன் முருகனை இதயத்தில்
இருத்தி சங்கரர் தியானம் செய்கிறார். நாமும் அவரை பின்பற்றி
முருகனை வழிப்பட்டு உய்வோம், உயர்வோம். இந்த ஸ்லோகத்தை
ஜபித்து வருகின்றவர்களை ஆபத்துகள் அணுகாது. மருத்துவம்
அறியாத மர்மங்கள் மந்திரத்தில் இருக்கின்றன.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 6 திருக்கயிலாய தரிசன பலன்.

  " கிரௌ மந்நிவாஸே நரா யே ( அ ) திருடா:
    ததா பர்வதே ராஜதே தே ( அ ) திருடா:
  இதீவ ப்ருவன் கந்த ஸைலாதி ரூட:
    ஸ தேவோ முதே மே ஸதா ஷண்முகோஸ்து ".

எப்பொழுது மனிதர்கள் தான் இருக்கும் மலையேறி வருகின்றார்களோ
அப்பொழுதே அவர்கள் திருக்கயிலாய மலையேறியவர்களாகவும்
ஆகிவிடுகின்றார்கள் என்று சொல்லுபவர் போல கந்தமாதன மலையில்
வீற்றிருக்கும் தேவன் ஆறுமுகக் கடவுள் எனக்கு எப்பொழுதும்
ஆனந்தத்தை அளிப்பவராக அமையட்டும்.

திருச்செந்தூரில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் கந்தமாதனம்
என்றழைக்கபடும் சிறிய மலையில் ஆனந்தமாக அமர்ந்திருக்கும்
ஆறுமுகன் தன்னை அண்டி வந்தவர்களுக்கும் ஆனந்தத்தை அள்ளி
கொடுப்பவனாக இருக்கவேண்டும் என்று சங்கரர் வேண்டிககொள்கிறார்.
முருகன் வெற்றி வேலனாய் கந்தமாதன மலையில் எழுந்திருப்பதை
தரிசிக்க ஆவலுடன் மலையேறும் அடியார்கள, திருக்கயிலை மலையை
ஏறியவர்களாக ஆகிவிடுகின்றார்கள என்று அறிவிப்பதன் மூலம்
திருச்செந்தூர்தான் திருக்கயிலாயம் என்றாகிறது." அஞ்சு முகத்தின்
அருட் சுடரால் வந்த ஆறுமுகப் பெருமானுமவன் ( அகத்தியர் ) "
என்று போற்றப்படும் முருகனை " செந்தில் மாமலையுறும்
செங்கல்வராயா " என்று பாலதேவராய ஸ்வாதிகள அழைக்கின்றார்கள்.
இந்த ஸ்லோகத்தை மட்டும் ஜபித்து வந்தால் திருக்கயிலாயத்தை
தரிசிப்பதால் கிடைக்கும் பலன் கிடைக்கும்.


சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 7 அனைத்து பாவங்கள் அழியும்

 " மஹாம்போதி தீரே, மஹாபாப சோரே
     முனீந்த்ரானு கூலே, ஸுகந்தாக்ய ஸைலே
  குஹாயாம் வஸந்தம், ஸ்வபாஸா லஸந்தம்
     ஐனார்திம் ஹரந்தம், ச்ரயாமோ குஹம் தம் ".

மாபெரும் பாவங்களை போக்குகின்றதும், சமுத்திரக்கரையில்
இடம் கொண்டதும், முனிவர்களின் தவத்திற்கு ஏற்றதாகவும்
இருக்கின்ற சுகந்த மலைக்குகையில் வசிக்கின்றவரும், தனது
காந்தியால் ஒளிர்கின்றவரும், மக்களின் மனக்கவலைகளை
அழிக்கின்றவருமான குகனை சரணடைவோம்

அழகன் முருகனை இதயத்தில் இருத்தி பக்தி செலுத்துகின்றவர்கள்,
பாவங்கள் அழிக்கபட்டு தூய்மை பெறுகிறார்கள்.நீயின்றி கதி எனக்கு
வேறில்லை என்று சரணடைவது பக்தியின் உச்ச கட்டம். குகன் முருகன்
குடியிருப்பதால், முனிவர்களின் தவத்திற்கு ஏற்றதாக, கடற்கரையில்
அமைந்துள்ள சுகந்தமலை பாவங்களை அழித்துவிடும் வல்லமை
கொண்டதாக விளங்குகின்றது. தனது காந்தியால் பிரகாசிக்கின்ற
முருகன் ஒப்பில்லாதவன். வேறெதையும் உவமையாக எடுத்து
காட்ட முடியாததால் முருகனுக்கு உவமை முருகனே என்ற முடிவுக்கு
வரவேண்டியிருக்கும்.அறிந்து செய்தவயோ, அறியாது செய்தவயோ
அத்தனை பாவங்களையும் அழித்தருளும் ஆறுமுகன், விரைவில்
வீடுபேற்றையும் அடையச்செய்கின்றான். எத்துனையோ விதமான
கவலைகள் மனதை சஞ்சலப்படுத்தி அச்சத்துக்குள்ளாக்கி, விதவிதமான
நோய்களுக்கு வழிவகுத்து, நம்மை அவதியுற செய்கின்றன.
" தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்; மனக்கவலை
மாற்றல் அரிது " (குறள் ),ஆதலால் செந்தில் முருகனை வழிபட
வேண்டியது அத்யாவசியமானது மட்டுமின்றி,லாபகரமானதும் கூட
என்று சங்கரர் எடுத்துரைக்கிறார்.