Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 7 அனைத்து பாவங்கள் அழியும்

 " மஹாம்போதி தீரே, மஹாபாப சோரே
     முனீந்த்ரானு கூலே, ஸுகந்தாக்ய ஸைலே
  குஹாயாம் வஸந்தம், ஸ்வபாஸா லஸந்தம்
     ஐனார்திம் ஹரந்தம், ச்ரயாமோ குஹம் தம் ".

மாபெரும் பாவங்களை போக்குகின்றதும், சமுத்திரக்கரையில்
இடம் கொண்டதும், முனிவர்களின் தவத்திற்கு ஏற்றதாகவும்
இருக்கின்ற சுகந்த மலைக்குகையில் வசிக்கின்றவரும், தனது
காந்தியால் ஒளிர்கின்றவரும், மக்களின் மனக்கவலைகளை
அழிக்கின்றவருமான குகனை சரணடைவோம்

அழகன் முருகனை இதயத்தில் இருத்தி பக்தி செலுத்துகின்றவர்கள்,
பாவங்கள் அழிக்கபட்டு தூய்மை பெறுகிறார்கள்.நீயின்றி கதி எனக்கு
வேறில்லை என்று சரணடைவது பக்தியின் உச்ச கட்டம். குகன் முருகன்
குடியிருப்பதால், முனிவர்களின் தவத்திற்கு ஏற்றதாக, கடற்கரையில்
அமைந்துள்ள சுகந்தமலை பாவங்களை அழித்துவிடும் வல்லமை
கொண்டதாக விளங்குகின்றது. தனது காந்தியால் பிரகாசிக்கின்ற
முருகன் ஒப்பில்லாதவன். வேறெதையும் உவமையாக எடுத்து
காட்ட முடியாததால் முருகனுக்கு உவமை முருகனே என்ற முடிவுக்கு
வரவேண்டியிருக்கும்.அறிந்து செய்தவயோ, அறியாது செய்தவயோ
அத்தனை பாவங்களையும் அழித்தருளும் ஆறுமுகன், விரைவில்
வீடுபேற்றையும் அடையச்செய்கின்றான். எத்துனையோ விதமான
கவலைகள் மனதை சஞ்சலப்படுத்தி அச்சத்துக்குள்ளாக்கி, விதவிதமான
நோய்களுக்கு வழிவகுத்து, நம்மை அவதியுற செய்கின்றன.
" தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்; மனக்கவலை
மாற்றல் அரிது " (குறள் ),ஆதலால் செந்தில் முருகனை வழிபட
வேண்டியது அத்யாவசியமானது மட்டுமின்றி,லாபகரமானதும் கூட
என்று சங்கரர் எடுத்துரைக்கிறார்.

No comments:

Post a Comment