Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 12 பரம்பொருள் பற்றிய அறிவு.

  " விதௌ க்லுப்த தண்டான் ஸ்வலீலா த்ரு தாண்டான்
     நிரஸ்தே பசுண்டான் த்விஷத்கால தண்டான்
  ஹதேந்த்ராரி ஷண்டான் ஜகத் த்ராண சௌண்டான்
     ஸதா தே ப்ரசண்டான் ச்ரயே பாஹூ தண்டான் "

  பிரம்மனை தண்டித்தவைகளும், விளையாட்டாக ப்ரமாணடங்களை
தரித்திருக்கின்றவைகளும், யானை துதிக்கையை தோற்கடித்தவைகளும்,
விரோதிகளுக்கு யமதண்டம் போன்றவைகளும், அசுரக் கூட்டத்தை
அழித்தவைகளும், உலகை காப்பதில் திறமை மிக்கவைகளும் .
மாபெரும் சக்தி வாய்ந்தவைகளுமான தங்களது தண்டம் போன்ற
நீண்ட கைகளை துதிக்கிறேன்.

ஓம் என்னும் ப்ரணவ மந்திரத்தின் உட்பொருளுக்கு விளக்கம் அளிக்க
அறியாது பிரமதேவன் விழிக்கையில், அவனது தலையில் தனது
கைகளால் குட்டியதோடன்றி சிறையிலும் அடைத்து விட்டான்
முருகன். தந்தை சிவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, விடுவித்தான்.
பின்நாட்களில் தந்தைக்கே, பிரணவத்திற்கு விளக்கம் தந்து சிவகுரு
நாதன் என்று பெயர் கொண்டான்.பிரமனுக்கு தண்டனை வழங்கிய
கைகள் பிரபஞ்சங்களையும் அவற்றில் அடங்கிய அனைத்து
உலகங்களையும் தரித்து கொண்டிருக்கின்றன என்று அறியும் பொழுது
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.விதவிதமான,வகைவகையான
உலகங்கள் இருக்கின்ற ப்ரபஞ்சங்கள் ஏராளமாக உள்ளன போலும்!
எதுவாயினும் அனைத்து உலகங்களையும்,ப்ரபஞ்சங்களையும்
ஒரு கட்டுகோப்பில் கொணர்ந்து, நெறிபடுத்தி இயங்கசெய்து
காத்தருளும், அப்பன் முருகனின் பன்னிரு கரங்களின் செயல்கள்
நமக்கு பெரும் வியப்பை தந்தாலும்,அவனுக்கு அதுவொரு
சாதாரண விளையாட்டுதான்.ஆணழகர்கள் கைகளை, யானையின்
நீண்ட பருத்த துதிககைக்கு ஒப்பிடுவது வழக்கம். முருகனின் கரங்களோ
யானையின் துதிக்கையை காட்டிலும், வியன்மிகு அழகுடன பொலிகின்றன.விரோதிகளுக்கு யம தண்டம் போன்று விளங்கும்
கரங்கள், அசுரர்கள் கூட்டத்தை ஒரேடியாக அழித்து வீரச்செயல்
புரிந்தன. திறமையுடன் உலகினை காத்துவரும், பெரும் சக்தி வாய்ந்த,
தண்டம் போன்று நீண்ட, திருமுருகனது பன்னிரு கரங்களை,
சங்கரர் இவ்வாறு போற்றி துதிக்கிறார்.

No comments:

Post a Comment