ஸ்லோகம் 31 ஆனந்தப் பரவசம்
" நம: கேகின சக்தயே சாபி துப்யம்
நமஸ்சாக துப்யம் நம: குக்குடாய
நம: ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன: ஸ்கந்தமூர்த்தே நமஸ்தே நமோஸ்து "
கந்தனின் வாகனம் மயிலுக்கு வணக்கம், ஆயுதம் வேலுக்கு வணக்கம்,
மற்றுமொரு வாகனம் மறிஆட்டுக்கு வணக்கம், கொடியாம் கோழிக்கு
வணக்கம், கடலுக்கும் கடற்கரை செந்தூர் நகருக்கும் வணக்கம்.
செந்தில் கந்தவேளே தங்களுக்கும் வணக்கங்கள் பலப்பல.
முருகன் வசிக்கும் இடம், அவனுடன் சம்பந்தப்பட்ட ஆயுதங்கள்,
வாகனங்கள் என்ற அனைத்திலும் அவனது சானித்யம் விளங்குவதால்,
வணங்குவதற்குரியனவாக ஆகின்றன.வாகனங்களாக ஆடும் மயிலும்
சேவை செய்கின்றன. பெரும்பாலும் மயில் வாகனத்தில்தான் முருகன்
காட்சி கொடுக்கிறான். பஞ்சபூதங்களில் அக்னிக்கு வாகனமாக ஆடு
விளங்குகிறது. அக்னியில் தோன்றி அக்னியாகவும் இருப்பதால்
ஆடும், முருகனுக்கு வாகனமாக எப்பொழுதேனும் செயல் படுகிறது.
அசுரர் கூட்டத்தை அழித்து, ' வெல்லும் செஞ்சேவல் பதாகை உயர்த்திய
வீரன் ' ஆகையினால் ஆடு, சேவல், மயில் வேல் எனும் இவைகளுக்கு
தனது வணக்கத்தை தெரிவிப்பதோடு, கடற்கரைக்கும், திருச்செந்தில்
நகருக்கும் வணக்கங்களை, சங்கரர் தெரிவிக்கிறார். முருகனையும்
அவனுடன் இணைந்திருக்கும் இடங்கள், ஆயுதங்கள், வாகனங்கள்
என்று எல்லாவற்றையும், போற்றி துதிக்க வேண்டும் என்று சங்கரர்
கருத்து தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment