Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

  ஸ்லோகம் 1 விநாயகர் வணக்கம்

ஸதா பாலரூபாபி ,விக்னாத்ரி ஹந்த்ரீ,
 மஹாதந்தி வக்த்ராபி, பஞ்சாஸ்ய மான்யா,
வதீந்ராதிம்ருக்யா, கணேசாபிதா மே,
 விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி:

குழந்தை வடிவிலேயே எப்பொழுதும்,நிலைத்திருப்பினும்
மாபெரும் மலைகள் போலெழும், தடைகளை தகர்க்கின்றவரும்,
நீண்ட தந்தங்களுடைய யானை முகத்தினரும், ஐம்முக சிவனாலும்
ஆராதிக்கப் படுகின்றவரும், பிரம்மன் இந்திரன் முதலிய தேவர்கள
அனைவராலும் தேடப்படுகின்றவரும், வர்ணணைகளுக்கு
எட்டாதவரும், கணேசன் என்ற பெயருடையவருமான அந்த
மங்களகரமானவர், எனக்கு செல்வத்தை வழங்கட்டும்."

கவலைகள் என்றால் என்னவென்றறியாத கணேசன் மற்ற
எவருடைய கவலைகளையும் போக்கடிப்பதில் வல்லவர்.
குழந்தைகள் போல எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதால்
குழந்தை உருவிலேயே விளங்கி கொண்டிருக்கிறார். செயல்
எதுவானாலும், எப்படிபட்டதானாலும் அதை விரைவில் செய்து
முடிக்கும் பேராற்றல் பெற்ற ஒரு அதிசய குழந்தை.தன்னை
துதிக்கின்றவர்களுககு ஏற்படும் அனைத்துவித தடைகளையும்
அகற்றி வெற்றியை அடைய செய்கிறார்.ஆஸ்யம் என்ற சொல்லுக்கு
முகம் என்று பொருள். பஞ்சாஸ்யம் என்பதால் ஐந்து முகங்கள்
கொண்ட சிவபெருமானை குறிக்கிறது. சிவனுக்கும் சில நேரங்களில்
இவருடைய தயவு தேவைபடுகிறது. மேலும் பஞ்சாஸ்யம் எனறு
சிங்கத்திற்கு பொருள் கொள்ளலாம்.பொதுவாக யானைகள்
சிங்கத்தை கண்டால் பயந்து ஓடிவிடும். ஆனால் யானைமுக
கணேசனை கண்டாலோ சிங்கங்கள் பணிந்து துதிக்கின்றன.
பிரம்மன்,இந்திரன் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள் தங்களது
முயற்சிகளில் வெற்றி பெற இவரைத்தான் தேடி வரவேண்டியிருக்கும்.
இவரையோ இவரது மகிமைகளையோ முழுமையாக வர்ணிப்பதென்பது
இயலாத காரியம். வினாயகரை துதித்துவிட்டுதான் மற்ற தெய்வங்களை
துதிக்கவேண்டும் என்பது தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. இதை அனுசரித்துதான் சங்கர பகவத்பாதாள் முதல்
ஸ்லோகத்தில் கணேசன் என்ற பெயருடைய மங்கள மூர்த்தியை
வணங்கிவிட்டு ஏனய முப்பத்து இரண்டு ஸ்லோகங்களால்.
செந்திலாண்டவனை போற்றி துதிக்கிறார்.



சுப்ரமண்ய புஜங்கம்

  ஸ்லோகம் 2 கவிதைகள் இயற்றும் அறிவு

" நஜானாமி சப்தம், நஜானாமி சார்த்தம்
     நஜானாமி பத்யம், நஜானாமி கத்யம்,
சிதேகா ஷடாஸ்யா, ஹ்ருதி த்யோததே மே,
     முகாந் நிஸ்ஸரந்தே, கிரஸ்சாபி சித்ரம்."

நான் சப்தம் அறிந்தவனல்ல, அதன் பொருள் அறிந்தவனல்ல,
பத்யம் அறிந்திலேன் கத்யமும் அறிந்திலேன். ஆயினும்
ஆறு முகங்களுடன் ஞான ஜோதி ஒன்று எனது இதயத்தில்
தோன்றி யதால், வாக்குகள் சப்திக்கபட்டு வெளிவருகின்றன.

பாக்கள், பாடல்கள் மற்றும் கவிதைகள் இயற்றுவதற்கு அவைகளுக்கென
ஏற்பட்டுள்ள இலக்கண அறிவு மிகவும் அவசியம்.ஓசை நயம், சொல்
நயம், சொற்கள், சொல்லவேண்டிய முறை, எதுகை மோனை
என்றெல்லாம் ஆராய்ந்து இலக்கண விதிப்படி கவிதைகள்
இயற்றுவதென்பது பேரறிவு பெற்ற கவிஞர்களால்தான் இயலும்.
திருமுருகன் அருள் கவிதைகள் இயற்றும் வல்லமையை வழங்கும்.
இந்த ஸ்லோகத்தை மட்டும் ஜபிக்கின்றவர்களுக்கு முருகன்
அருளால் வியன்மிகு கவிதைகள் இயற்றும் வாய்புகள் வந்தடையும்.
ஊமையாய் பிறந்த குமரகுருபரர், செந்திலாண்டவன் அருளால்
பேசும் சக்தி பெற்று, மாபெறும் கவிஞராகி பகழ் கொண்டார். இது
போன்ற எத்துனையோ அதிசயங்கள் செந்தில் முருகன் சன்னதியில்
அரங்கேறியிருக்கின்றன.பரமசிவனின் அவதாரமாய் புவியில்
தோன்றி உலவிய ஆதிசங்கரர் வடமொழியில் பாண்டித்யம்
பெற்ற மாபெரும் கவிஞர்.ஆயினும் முருகன் சன்னதியில் தன்னை
ஒரு சாதாரணமான பக்தனாக தாழ்திக் கொண்டு துதிக்கின்றார்.இது
சங்கரரின் வினய பாவம் அல்லது அவையடக்கத்தை காட்டுவதுடன,
அகந்தை அகன்ற மனதில்தான் ஆண்டவன் தோன்றுகிறான்
என்பதை தெளிவுபடுத்துகிறது. வழிபட வேண்டும் எனற எண்ணம்
தோன்றியக் கணமே, சங்கரர் இதயத்தில் ஆறுமுகத்துடன் ஞான
ஜோதியாக செந்தல் வேலன் உதித்ததனால் சொற்கள் கடல் மடை
திறந்த வெள்ளம் போல வெளிவந்தன.அதாவது முருகனே
இதயத்தில் எழுந்து தனது சொற்களால் தன்னை தானே துதித்து
கொள்வதாக கருத வேண்டியிருக்கிறது.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 3 செந்தில் முருகன் காட்சி.

" மயூரா திரூடம், மஹாவாக்ய கூடம்
   மனோஹாரி தேஹம், மஹச்சித்த கேஹம்
மஹீ தேவதேவம், மஹாவேத பாவம்
 மஹாதேவ பாலம் பஜே லோகபாலம் ",

மயில் வாகனத்தில் ஏறுகின்றவரும், மஹாவாக்யங்களின்
உட்கருத்தானவரும், மனதை வசீகரிக்கும் அழகிய தேகத்தினரும்,
மஹான்களின் இதயத்தை தனது இருப்பிடமாக்கி கொண்டவரும்,
வேதவிற்பன்னர்களால் ஆராதிக்கபடுகின்றவரும், உபநிடதங்களின்
பொருளாய் திகழ்கின்றவரும், பரமசிவனின் புத்திரரும், உலகங்களை
காத்தருள்கின்வருமாகிய உம்மை வணங்குகிறேன்.

வேலும் மயிலும் துணை செய்ய, குருவாய் வருவாய் அருள்வாய்
குகனே. மயிலேறி விளையாடும் முருகன் வேலலெடுத்து
வேதனைகளை போக்குகின்றவன். மனமே மயில் வாகனம்.
நமது மனதில் புகுந்து ஆட்கொள்ளும் கெட்டிக்காரன்." அஹம்
ப்ரஹ்மாஸ்மி", " தத்வமஸி" போன்ற உபநிடத வாக்கியங்களின்
உட்பொருளாக திகழ்கிறான். ரிக்,யஜுர்,சாம,அதர்வண எனும்
நான்கு வேதங்களின் சாரமே உபநிடதங்கள். இந்த நான்கு வேதங்களே
மயில் வடிவெடுத்து முருகனுக்கு சேவை செய்கின்றன. முருகு என்ற
தமிழ் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.எவரையும் கவர்ந்து
வசீகரித்து வசியம் செய்துவிடும் பேரழகு செம்மேனியனே முருகன்..
முனிவர்களின் இதய குகையில் வசிப்பதால் குகன் எனறு பெயர்
கொண்டான். வேதங்களை ஆராய்கின்றவர்கள் முருகனைத்தான்
உபாசனா தெய்வமாக கொள்கிறார்கள.பரமசிவனின் மகன்.
தந்தைக்கே பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருநாதன். அனைத்து
உலகங்களையும் காத்து இரட்சிக்கின்றவன்.இவ்வாறு செந்தில்
சுப்ரமண்யனை,சங்கரர் போற்றி துதிக்கறார்.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 4 பிறவிப் பிணியகலும்.

" யதா ஸந்நிதானம் கதா மானவா மே,
   பவாம்போதி பாரம் கதாஸ்தே ததைவ,
 இதி வ்யஞ்ஜயன் ஸிந்துதீரே ய ஆஸ்தே,
  தமீடே பவித்ரம், பராசக்தி புத்ரம்."

எப்பொழுது மனிதர்கள் எனது சன்னதியை அடைகிறார்களோ
அப்பொழுதே, அவர்கள் சம்சாரக்கடலின் கரையை அடைந்து
விடுகிறார்கள் என்று சுட்டி காட்டுவது போல சமுத்திரக்கரையில்
வசிக்கின்றவனும், பக்தர்களின் பாவங்களை போக்குகின்றவனும்,
பராசக்தியின் புத்திரனுமான முருகா, உன்னை துதிக்கிறேன்.

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே .ஆதிசங்கரர் முருகன்
முன் நின்று கொண்டு, திருச்செந்தூரில் புஜங்கம் பாடி துதித்தார்.
திருச்செந்தூர் மிகவும் பழமை வாய்த புனித தலம். இரண்டாயிரம்
ஆண்டுகள் அல்லது அதற்கும் முன்பிருந்தே விளங்கி வரும் அழகிய
நகர்.ஆரவாரத்துடன் அலைகள் கரை அடைவதை காண்பது
ஆச்சரியமாக இருக்கும். அக்காரணம் கொண்டு நக்கீரர் திருச்சீரலைவாய்
என்று பெயரிட்டார்.கடற்கரையை ஒட்டி மற்ற எத்துனையோ
இடடங்களில் கடல் புகுந்து ஆக்ரமித்து கொண்டுவிட்டாலும்,
முருகன் கோவிலுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. அனைத்தையும்
அடக்கி ஆள்கின்ற ஆறுமுகனுக்கு கடலும் அடங்தானே வேண்டும்.
" பிறவிப் பெருங்கடல் நீந்துவர்,நீந்தாதார் இறைவனடிசேராதார் ",
( திரு வள்ளுவர் ) இறைவனை விடாது வழிபடுகின்றவர்கள்
பிறவி பெருங் கடலை எளிதில் நீந்தி கரை ஏறி விடுவார்கள்.அதிலும்
ஆறுமுகனை ஆராதிக்கின்றவர்கள தாங்கள்மட்டுமல்ல மற்றவர்களையும் கரையேற்றி விடுவார்கள. தனது சன்னதிக்கு
எப்பொழுது பக்தர்கள் வந்து தரிசிக்கிறார்களோ,அப்பொழுதே
அவர்கள் பிறவி பெருங்கடலை எளிதாக நீந்தி கடந்து கரையேறி
விடுவார்கள் என்பதை எடுத்து காட்டுவது போல , முருகன்
கடற்கரையில் வசித்து வருகிறான்.பராசக்தியின மைந்தனும்,
பக்தர்களின் பாவங்களை போக்கி காப்பாற்றுகின்றவனுமாகிய
அந்த செந்தில் முருகனை இவ்வாறு சங்கரர் வியந்து துதிக்கிறார்.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 5 துயரங்கள் நீங்கிடும்.

" யதாப்தேஸ் தரங்கா:லயம் யாந்தி துங்கா:
  ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே
இதீவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்ஸயந்தம்
 ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்."

உயரமான சமுத்ர அலைகள், எவ்வாறு தனது ஆலயவாயிலை
அடைந்ததும் அழிகின்றனவோ, அவ்வாறே பக்தர்களின் பேராபத்துகள்
தனது ஆலயவாயிலுக்கு வந்ததுமே அழிந்துவிடுகினறன என்பதை
அலைகளை காட்டுவதன் மூலம் உணர்த்துகின்ற குஹன் முருகனை
இதயத்தாமரையில் தியானிக்கின்றேன்.

எவையெவைகளை இன்பங்கள் என்று ஏற்றுக்கொண்டு, அவைகளை
நாடி தேடிச் சென்று அனுபவித்தாலும், பின்நாட்களில் அவைகள்
நம்மை துன்பக் கடலுக்கு அழைத்துச் சென்று அதில் நம்மை நன்கு
அமிழ்த்திவிடுகின்றன. இது யாவரும் அனுபவித்தறிந்த உண்மை.
துன்பங்களும், துயரங்களும் நிறைந்த வாழ்வில் நிம்மதி காண
இறைவழிபாடு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அமைதியும்,
ஆறுதலும், நிம்மதியும் அளித்து பக்தர்களை காத்தருள்வதில்
முருகனுக்கு இணை முருகனே. காரணங்கள் எதுவாயினும்,
கண்டறிந்து கரையேற்றுவதில் கந்தன் தனித்தன்மை கொண்ட
திறமைசாலி. கசந்து தவிக்கும் மனதிற்கு, தித்திக்கும் தேனமுதாய்
திகழ்கின்றவன். " பத்தித் திருமுக மாறுடன், பன்னிரு தோள்களுமாய்
தித்தித் திருக்கும் அமுது கண்டேன் " ( கந்தர் அலங்காரம்- கவி 47 )
இன்றய நாகரீக வாழ்வில் விபத்துகளும்,ஆபத்துகளும் சாதாரண
சம்பவங்களாகி விட்டன. ஆலயவாயிலை அடைந்ததுமே அலைகள்
அடங்கி அமைதியாவது போல, பக்தர்களுக்கு ஏற்படும், ஏற்படவிருக்கும்
அனைத்து ஆபத்துகளும் அவர்கள் ஆலயத்தை நெருங்கியதுமே
அழிந்துவிடுகின்றன. இந்த உண்மையை உபதேசிப்பது போல
செந்தூரில் கோவில் கொண்டிருக்கும் குகன் முருகனை இதயத்தில்
இருத்தி சங்கரர் தியானம் செய்கிறார். நாமும் அவரை பின்பற்றி
முருகனை வழிப்பட்டு உய்வோம், உயர்வோம். இந்த ஸ்லோகத்தை
ஜபித்து வருகின்றவர்களை ஆபத்துகள் அணுகாது. மருத்துவம்
அறியாத மர்மங்கள் மந்திரத்தில் இருக்கின்றன.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 6 திருக்கயிலாய தரிசன பலன்.

  " கிரௌ மந்நிவாஸே நரா யே ( அ ) திருடா:
    ததா பர்வதே ராஜதே தே ( அ ) திருடா:
  இதீவ ப்ருவன் கந்த ஸைலாதி ரூட:
    ஸ தேவோ முதே மே ஸதா ஷண்முகோஸ்து ".

எப்பொழுது மனிதர்கள் தான் இருக்கும் மலையேறி வருகின்றார்களோ
அப்பொழுதே அவர்கள் திருக்கயிலாய மலையேறியவர்களாகவும்
ஆகிவிடுகின்றார்கள் என்று சொல்லுபவர் போல கந்தமாதன மலையில்
வீற்றிருக்கும் தேவன் ஆறுமுகக் கடவுள் எனக்கு எப்பொழுதும்
ஆனந்தத்தை அளிப்பவராக அமையட்டும்.

திருச்செந்தூரில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் கந்தமாதனம்
என்றழைக்கபடும் சிறிய மலையில் ஆனந்தமாக அமர்ந்திருக்கும்
ஆறுமுகன் தன்னை அண்டி வந்தவர்களுக்கும் ஆனந்தத்தை அள்ளி
கொடுப்பவனாக இருக்கவேண்டும் என்று சங்கரர் வேண்டிககொள்கிறார்.
முருகன் வெற்றி வேலனாய் கந்தமாதன மலையில் எழுந்திருப்பதை
தரிசிக்க ஆவலுடன் மலையேறும் அடியார்கள, திருக்கயிலை மலையை
ஏறியவர்களாக ஆகிவிடுகின்றார்கள என்று அறிவிப்பதன் மூலம்
திருச்செந்தூர்தான் திருக்கயிலாயம் என்றாகிறது." அஞ்சு முகத்தின்
அருட் சுடரால் வந்த ஆறுமுகப் பெருமானுமவன் ( அகத்தியர் ) "
என்று போற்றப்படும் முருகனை " செந்தில் மாமலையுறும்
செங்கல்வராயா " என்று பாலதேவராய ஸ்வாதிகள அழைக்கின்றார்கள்.
இந்த ஸ்லோகத்தை மட்டும் ஜபித்து வந்தால் திருக்கயிலாயத்தை
தரிசிப்பதால் கிடைக்கும் பலன் கிடைக்கும்.


சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 7 அனைத்து பாவங்கள் அழியும்

 " மஹாம்போதி தீரே, மஹாபாப சோரே
     முனீந்த்ரானு கூலே, ஸுகந்தாக்ய ஸைலே
  குஹாயாம் வஸந்தம், ஸ்வபாஸா லஸந்தம்
     ஐனார்திம் ஹரந்தம், ச்ரயாமோ குஹம் தம் ".

மாபெரும் பாவங்களை போக்குகின்றதும், சமுத்திரக்கரையில்
இடம் கொண்டதும், முனிவர்களின் தவத்திற்கு ஏற்றதாகவும்
இருக்கின்ற சுகந்த மலைக்குகையில் வசிக்கின்றவரும், தனது
காந்தியால் ஒளிர்கின்றவரும், மக்களின் மனக்கவலைகளை
அழிக்கின்றவருமான குகனை சரணடைவோம்

அழகன் முருகனை இதயத்தில் இருத்தி பக்தி செலுத்துகின்றவர்கள்,
பாவங்கள் அழிக்கபட்டு தூய்மை பெறுகிறார்கள்.நீயின்றி கதி எனக்கு
வேறில்லை என்று சரணடைவது பக்தியின் உச்ச கட்டம். குகன் முருகன்
குடியிருப்பதால், முனிவர்களின் தவத்திற்கு ஏற்றதாக, கடற்கரையில்
அமைந்துள்ள சுகந்தமலை பாவங்களை அழித்துவிடும் வல்லமை
கொண்டதாக விளங்குகின்றது. தனது காந்தியால் பிரகாசிக்கின்ற
முருகன் ஒப்பில்லாதவன். வேறெதையும் உவமையாக எடுத்து
காட்ட முடியாததால் முருகனுக்கு உவமை முருகனே என்ற முடிவுக்கு
வரவேண்டியிருக்கும்.அறிந்து செய்தவயோ, அறியாது செய்தவயோ
அத்தனை பாவங்களையும் அழித்தருளும் ஆறுமுகன், விரைவில்
வீடுபேற்றையும் அடையச்செய்கின்றான். எத்துனையோ விதமான
கவலைகள் மனதை சஞ்சலப்படுத்தி அச்சத்துக்குள்ளாக்கி, விதவிதமான
நோய்களுக்கு வழிவகுத்து, நம்மை அவதியுற செய்கின்றன.
" தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்; மனக்கவலை
மாற்றல் அரிது " (குறள் ),ஆதலால் செந்தில் முருகனை வழிபட
வேண்டியது அத்யாவசியமானது மட்டுமின்றி,லாபகரமானதும் கூட
என்று சங்கரர் எடுத்துரைக்கிறார்.

சுப்ரமண்ய புஜங்கம்

  ஸ்லோகம் 8 மனநிம்மதி அடைவதற்கு.

" லஸத் ஸ்வர்ண கேஹே ந்ருணாம் காம தோஹே
   ஸுமஸ் தோம ஸஞ்சந்த மாணிக்ய மஞ்சே
 ஸமுத்யத் ஸஹஸ்ரார்க்க துல்யப் ப்ரகாசம்
  ஸதா பாவயே கார்த்திகேயம் ஸுரேசம். "

 பக்தர்களின் விருப்பங்களை வழங்குவதற்காக, ஒளிர்கின்ற தங்க
கோயிலில், பூக்களால் பரப்பபட்ட மாணிக்க கட்டிலில், ஆயிரக்கணக்கான
உதயசூரியன்களுக்கு நிகரான காந்தியுடன் இருக்கின்ற , தேவர்களுககு
ஈசனான கார்த்திகேயனை, எப்பொழுதும் தியானிக்கிறேன்.

பக்தர்கள் கோரும் வரங்களை வழங்குகின்ற இயல்பு கொண்ட முருகன்,
ஒளி வீசும் தங்கத்தாலான கோயிலில், பூக்களால் அலங்கரிக்கபட்ட
மாணிக்க கட்டிலில் வீற்றிருப்பது காணக் கண்கொள்ளா காட்சியாகும்.
சூரியன் உதிக்கும் பொழுது முதன்முதலாக வெளிப்படும் செந்நிற
கதிர்களுக்கு அருணன் என்று பெயர். அந்த அருணனாக இருப்பது
முருகனே. செந்தில் முருகனோ ஆயிரம் உதய சூரியர்களின் மொத்த
ஒளியை காட்டிலும் பேரொளி வீசும் தேகத்தினன். அனைத்து தேவர்களுக்கும் ஈசனாக விளங்குகின்ற தேவதேவன். மன்மத
தகனத்தின் பொழுது சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளியேறிய
ஆறு நெருப்பு கோளங்கள், கங்கை நதி கலந்திடும் சரவண பொய்கையை
அடைந்ததும் ஆறு குழந்தைகளாக வடிவெடுத்தன. கார்திகை பெண்கள்
அறுவரும் ஆளுக்கொன்றாக குழந்தைகளை எடுத்து பால் புகட்டி
வளர்க ஆரம்பித்தார்கள். பின்நாட்களில் அன்னை பார்வதியால்
ஒன்று சேர அணைக்கபட்டு ஆறுமுகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் முருகப்பெருமான் தோன்றினான்.கார்த்திகை
பெண்களால் வளர்க்கபட்டதால் கார்திகேயன் என்றும் பெயர்
பெற்றான். இத்தகு மகிமை மிகுந்த முருகனை எப்பொழுதும்
தியானிப்பதாக சங்கரர் இயம்புவது நமக்காகத்தான்.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 9 பாதங்களே புகலிடம்

" ரணத் தம்ஸகே மஞ்ஜூளே (அ ) த்யந்த சோணே
    மனோஹாரி லாவண்ய பீயூஷ பூர்ணே
 மனஷ் ஷட்பதோ மே பவ க்லேச தப்த:
   ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே ",

ஒலி எழுப்பும் சிலம்புகள் உடையதும், அழகு மிகுந்ததும், நன்கு
சிவந்ததும், மனதை ஈர்க்கும் அழகாம் அமிருதத்தினால் நிரம்பி
இருப்பதுமான தங்களுடைய பாத தாமரைகளில், ஸம்ஸார
தாபத்தால் தவிக்கும், எனது மனமெனும் வண்டானது
எப்பொழுதும் ரமித்துக்கொண்டிருக்கட்டும்

செங்கதிர் வேலோன் பாதங்களில் உள்ள சிலம்புகள் எழுப்பும் ஒலி
கீதம் பாடுவது போல இனிமையாக இருக்கும்.இயற்கையிலேயே
சிவந்த நிறம் பெற்றுள்ள முருகன் அசைந்தால் மேலும் சிவந்து
காணப்படுகின்றான். அருணனாக இருப்பதால் உதயத்திற்கு பிறகு
சிவப்பு நிறம் சிறிதுசிறிதாக மேலோங்குகிறது. அவனது திருவடிகள்
அமிருதத்தால் நிரப்பபட்ட, அழகுமிகு செந்தாமரை மலர்கள் போல
விளங்கி அடியார்கள் மனதை வெகுவாக கவர்ந்து விடுகின்றன.
அழகு தாமரை சுரக்கும் தேனை பருக ஆவல் கொண்ட வண்டுகள்
மலரை சுற்றிசுற்றி பறந்து ரீங்காரம் செய்தவண்ணம் பருகி களிக்கின்றன. நமது வாழ்வோ துன்பங்களும் துயரங்களும் நிறைந்ததாக
உள்ளது. பிறவிப்பெருங்கடலில் விழுந்து தவித்துக் கொண்டிருக்கிறோம்.
அனைத்தும் அறிந்த ஆதிமூலம் ஆறுமுகன் திருவடிகள் ஒன்றே
சிறந்த புகலிடம். அடைக்கலம் அளித்து, உயர்நிலைக்கு நம்மை
ஏற்றிவிடும் அவனது திருவடிகளே துணை. ஆகையினால்
நமது மனம் என்ற வண்டானது, முர்கனின் பாதங்கள் என்ற தாமரை
மலரில் புகுந்துறையவேண்டும் என்று சங்கரர் வேண்டிக்கொள்கிறார்.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 10 அகத்திருள் அகலும்.

 " ஸுவர்ணாப திவ்யாம்பரைர் பாஸமானாம்
    க்வணத் கிங்கிணி மேகலா சோப மானாம்
 லஸத் ஹேம பட்டேன வித்யோத மானாம்
   கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் "

 கந்த பெருமானே, தேவர்கள் உடுக்கின்ற பொன்பொன்ற சிறந்த ஆடைகளால் ஒளிர்கின்றதும், ஒலியெழுப்பும் சலங்கைகள்
கோர்க்கபட்ட ஒட்டியாணத்தால் அலங்கரிக்கபட்டதும், பொன்னாலான
பட்டத்தினால் பிரகாசிக்கின்றதுமான, உமது இடையை தியானிக்கிறேன்.

இதற்கு முந்தய ஸ்லோகத்தில் முருகனின் தாமரை பாதங்களை
துதித்த சங்கரர், இனி வரும் ஸ்லோகங்களில் அடி தொட்டு முடி வரை,
என்ற ரீதியில் வர்ணித்து, ஆராதிக்கின்றார். அழகு என்ற சொல்
வடிவெடுக்கும் பொழுது முருகனாகிறது. அவனுடைய எந்தவொரு
அங்கமும், மற்ற எந்தவொன்றையும்விட , எந்தவிதத்திலும் குறைந்து
விடவில்லை என்றவாறு முழு வடிவும் அழகு என்ற சொல்லுக்கு
தனி இலக்கணமே வகுத்துவிடுகிறது. செந்திலாண்டவனின்
இடுப்பு, பொன்னாலான ஆடைகளால் அலங்கரிக்கபட்டிருக்கிறது.
மேலும் தங்கத்தினாலான பட்டம்,மற்றும் அதை சுற்றியவாறு
தங்க ஒட்டியாணம் என்று மின்னியவாறு விளங்குகிறது.பொன்
பட்டாடைகளாலும், பொன்ணாபரனங்களாலும் அலங்கரிக்க பட்டிருக்கும்,
இடுப்பு பாகத்தை தியானிக்கிறேன் என்று சங்கரர் கூறி துதிக்கிறார்.
இந்த ஸ்லோகத்தை மட்டும் ஜபித்து வந்தால் அறியாமை நீங்குவதுடன்
அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும்.

சுப்ரமண்ய புஜங்கம்

  ஸ்லோகம் 11 ஆபத்துகள் அணுகாது.

  " புலிந்தேச கன்யா கனாபோக துங்க
     ஸ்தனாலிங்க னாசக்த காஸ்மீர ராகம்
  நமஸ்யாம் யஹம் தாரகாரே தவோர:
     ஸ்வ பக்தாவனே ஸர்வதா ஸானுராகம் ",

 தாரகாசுரனை அழித்த முருகா, வேடன் மகள், வல்லியின் பெருத்து
விரிந்து உயர்ந்திருக்கும், கொங்கைகளின் அணைப்பினால், குங்கும
பூப்போல சிவந்திருக்கின்ற , பக்தர்களை காப்பாற்றுவதில் எப்பொழுதும்
ஆவலுடன் இருக்கின்ற தங்களது மார்பை வணங்குகின்றேன்.

ஆறுமுகன் மேல் கொண்ட ஆறாக்காதலினால், கடும் தவம் செய்து,
அவனையே கணவனாக அடைந்தவள், வேடன் மகள் வல்லி.
அவனுடைய சிவந்த மார்பை தனது மார்பகங்களால், நன்கு அழுத்தியவாறு அரவணைத்துக் கொள்வதால், முருகனின் மார்பு
குங்கும பூப்போல மேலும் சிவந்து விடுகிறது. இந்த ஸ்லோகங்களை
இயற்றிய, சங்கரருக்கோ வேறொரு காரணம் புலப்படுகின்றது.
அதாவது தனது பக்தர்களை அக்கறையுடன காப்பாற்றுவதில்,
எப்பொழுதும் ஆவலுடன் தயார் நிலையில் இருந்து கொண்டிருப்பதால்,
முருகனது மார்பு மேலும் மேலும் சிவந்த வண்ணம் இருக்கின்றது
என்கிறார்.இச்சா சக்தி வல்லியும், கிரியா சக்தி தேவயானையும்
புடைசூழ, ஞானசக்தியாக திகழ்கின்ற முருகன்,தனது பக்தர்களை
மாயையின் பிடியிலிருந்து விடுவித்து பேரின்ப நிலையை
அடைய செய்வதில் மிகவும் ஆசை கொண்டவனாக இருக்கின்றான்.
இந்த ஸ்லோகத்தை மட்டும் ஜபித்து வந்தால் ஆபத்துகள் அணுகாது.
அடியார்களின் அனைத்து கவலைகளையும், அகற்றி அருளும்,
செந்தில் முருகனது செவ்வழகு மார்பினை இவ்வாறு சங்கரர்
வணங்கி துதிக்கிறார்.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 12 பரம்பொருள் பற்றிய அறிவு.

  " விதௌ க்லுப்த தண்டான் ஸ்வலீலா த்ரு தாண்டான்
     நிரஸ்தே பசுண்டான் த்விஷத்கால தண்டான்
  ஹதேந்த்ராரி ஷண்டான் ஜகத் த்ராண சௌண்டான்
     ஸதா தே ப்ரசண்டான் ச்ரயே பாஹூ தண்டான் "

  பிரம்மனை தண்டித்தவைகளும், விளையாட்டாக ப்ரமாணடங்களை
தரித்திருக்கின்றவைகளும், யானை துதிக்கையை தோற்கடித்தவைகளும்,
விரோதிகளுக்கு யமதண்டம் போன்றவைகளும், அசுரக் கூட்டத்தை
அழித்தவைகளும், உலகை காப்பதில் திறமை மிக்கவைகளும் .
மாபெரும் சக்தி வாய்ந்தவைகளுமான தங்களது தண்டம் போன்ற
நீண்ட கைகளை துதிக்கிறேன்.

ஓம் என்னும் ப்ரணவ மந்திரத்தின் உட்பொருளுக்கு விளக்கம் அளிக்க
அறியாது பிரமதேவன் விழிக்கையில், அவனது தலையில் தனது
கைகளால் குட்டியதோடன்றி சிறையிலும் அடைத்து விட்டான்
முருகன். தந்தை சிவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, விடுவித்தான்.
பின்நாட்களில் தந்தைக்கே, பிரணவத்திற்கு விளக்கம் தந்து சிவகுரு
நாதன் என்று பெயர் கொண்டான்.பிரமனுக்கு தண்டனை வழங்கிய
கைகள் பிரபஞ்சங்களையும் அவற்றில் அடங்கிய அனைத்து
உலகங்களையும் தரித்து கொண்டிருக்கின்றன என்று அறியும் பொழுது
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.விதவிதமான,வகைவகையான
உலகங்கள் இருக்கின்ற ப்ரபஞ்சங்கள் ஏராளமாக உள்ளன போலும்!
எதுவாயினும் அனைத்து உலகங்களையும்,ப்ரபஞ்சங்களையும்
ஒரு கட்டுகோப்பில் கொணர்ந்து, நெறிபடுத்தி இயங்கசெய்து
காத்தருளும், அப்பன் முருகனின் பன்னிரு கரங்களின் செயல்கள்
நமக்கு பெரும் வியப்பை தந்தாலும்,அவனுக்கு அதுவொரு
சாதாரண விளையாட்டுதான்.ஆணழகர்கள் கைகளை, யானையின்
நீண்ட பருத்த துதிககைக்கு ஒப்பிடுவது வழக்கம். முருகனின் கரங்களோ
யானையின் துதிக்கையை காட்டிலும், வியன்மிகு அழகுடன பொலிகின்றன.விரோதிகளுக்கு யம தண்டம் போன்று விளங்கும்
கரங்கள், அசுரர்கள் கூட்டத்தை ஒரேடியாக அழித்து வீரச்செயல்
புரிந்தன. திறமையுடன் உலகினை காத்துவரும், பெரும் சக்தி வாய்ந்த,
தண்டம் போன்று நீண்ட, திருமுருகனது பன்னிரு கரங்களை,
சங்கரர் இவ்வாறு போற்றி துதிக்கிறார்.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 13 தாபங்கள் நீங்கும்.

  " ஸதா சாரதா: ஷண் ம்ருகாங்கா யதி ஸ்யு:
     ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்
  ஸதா பூர்ண பிம்பா: கலங்கைச்ச ஹீனா:
     ததா த்வன் முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் "

அய்யனே முருகா, முழு வட்டங்களாய், களங்கமற்றவைகளாய்,
ஆறு சந்திரர்கள் எங்கும் எப்பொழுதும் உதித்தவண்ணம்
இருக்குமேயானால், அவைகளை உனது முகங்கள் ஆறுக்கும்,
ஒப்பிட்டு சொல்வேன்

அன்றாடம் நாம் சந்திக்கும் சந்திரன்,களங்கத்துடன்( கறை ) கூடியதாக
விளங்குகிறது. மேலும் வளர்வது தேய்வது என்ற நிலையற்ற
தன்மை கொண்டதாகவும் உள்ளது. மாதம் ஒருமுறை மட்டும்
முழு வட்டமாய் ஒளி வீசி கண்ணுக்கு குளிர்ச்சியும்,மனதுக்கு மகிழ்ச்சியும் தருகிறது. இவ்வித குறைகளுடன் ஒரே ஒரு.சந்திரன்
தான் விண்ணில் உலவிக்கொண்டிருக்கிறது. இவ்விதமான சந்திரனை,
முருகனின் முகத்திற்கு ஒப்பிடுவது ஏற்புடயதல்ல என்பது தான்
சங்கரரின் கருத்து. அருள்மிகு திருமுருகனின், ஆறு முகங்களும்
அருளொளி சுடர்களை அள்ளி வீசியவாறு, குறைகளற்றதாய்,
எங்கும் எப்பொழுதும் பிரகாசித்தவாறு, வியன்மிகு அழகுடன்
நம்மை மயக்கி தன்பால் இழுத்துக்கொள்கின்றன. மனதுக்கும்
சந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது யாவரும் அறிந்த
உண்மை. இந்த ஸ்லோகம் ஜபிக்கின்றவர்களது தாபங்கள்
அனைத்தையும் அறவே நீக்கிவிடும். எவரையும் தன்பால்
வசியம் செய்துவிடும் அற்புத ஆற்றலையும் அளிக்கும்.

சுப்ரமண்ய புஜங்கம்

    ஸ்லோகம் 14 ஆரோக்யம் நல்கும்

  " ஸ்புரன் மந்தஹாஸை: ஸஹம்ஸானி சஞ்சத்
     கடாக்ஷா வலீ ப்ருங்க ஸங்கோஜ் ஜ்வலானி
  ஸுதாஸ்யந்தி பிம்பாதராணீச ஸூனோ
    தவா லோகயே ஷண்முகாம் போரு ஹாணி "

 அன்னப் பறவைகளின அசைவுகள் போன்ற புன்சிரிப்புகள,
கருவண்டுகள் ஊர்வது போன்ற பன்னிரு கண்கள், அமிருதம்
பெருக்கும் கொவ்வை பழங்கள் போன்ற உதடுகள் என்றவாறு
திகழும் தங்களது ஆறு முகத் தாமரைகளை நான் காண்கிறேன்.

பால் போன்ற வெண்மை நிற அன்னப் பறவைகள், தாமரை
தடாகத்தில் அங்குமிங்கும் , மெதுவாக அசைந்து நீந்துவது போல,
வெண் பற்கள் சற்றே தெரிய வெளிப்படும் முருகனது புன்சிரிப்புகள்
காண்போர் மனதை வெகுவாக கவர்ந்துவிடுகின்றன என்று, சங்கரர்
நேரில் கண்டு போற்றுகிறார். தேவர்களுக்கு இமைகள் கொட்டுவதில்லை
என்று சொல்வதுண்டு. முருகனின் பன்னிரு கண்களின் கருவிழிகள்,
கருவண்டுகள் ஊர்வது போன்று இருக்கின்றன. உதடுகள அனைத்தும்
அமிருத ரசம் சொரியும் கொவ்வை பழங்களை நிகர்த்திருக்கின்றன.
இவ்விதமாக அழகு பொலியும், தங்களது ஆறு முகத் தாமரைகளை
நான் தரிசித்து கொண்டிருக்கிறேன், என்று சங்கரர் கூறுகிறார்.
நோய்கள் நீங்கி, நல்ல ஆரோக்யம் அடைவதற்கு, இந்த ஸ்லோகத்தை
ஜபிக்க வேண்டும். முருகனை நேரில் காண உதவும்.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 15 கடைக்கண் பார்வை.

   " விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
       தயாஸ் யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணே ஷு
   மயிஷத் கடாக்ஷ: ஸக்ருத் பாதி தத்சேத்
      பவேத் தே தயாசீல கா நாம ஹானி: "

தயாசீலனே முருகா, அகன்று காதுவரை நீண்டு, யாண்டும் கருணை
பெருக்குடன் கூடிய, தங்களது பன்ணிரண்டு கண்களில், ஒன்றின்
கடைக்கண் பார்வை, ஒருமுறை சறிதேனும் என் மேல் போடப்பட்டால்,
தங்களுக்கு என்ன நஷ்டம்?

வெளியுலக காட்சிகள் அனைத்தையும் உள்வாங்கி மனதில் பதிய
செய்வதிலும், மனதில் எழும் எண்ணங்களை வெளியேற்றுவதிலும்
கண்கள் முக்கிய பங்குவகிககின்றன. சோர்வு,களைப்பு,கவலை,
மகிழ்ச்சி என்ற உணர்சிகளை எல்லாம் கண்கள் பிரதிபலிப்பது
யாவரும் அறிந்ததே. அதனால்தான் அகத்தின் அழகு முகத்தில்
தெரியும் என்கிறார்கள். அடியார்கள் பால் அளவற்ற அன்பும் கருணையும்
கொண்டிலங்கும், ஆறுமுகனின் மனமோ,எப்பொழுதும் கருணை
பெருக்குடன் கூடியதாக இருக்கிறது.அதனால்தான் கந்தா, முருகா,
கருணாகரனே என்றெல்லாம் அழைக்கறார்கள். தீனதயாபரன், தயா
சாகரன் என்றும் துதிக்கபடும் முருகனை, சங்கரர் தயாசீலா என்கிறார்.
தன்னை நாடி வரும் பக்தர்களை காப்பாற்றி, கரையேற்றவதை
ஒரு சபதமாகவே எடுத்துக்கொண்டு, திருச்செந்தூரில் விளங்கும்
முருகனின் பன்னிரண்டு கண்களும் கருணை மழை பொழியும்
கருமேகங்கள் போல காணப்படுகின்றன. இத்துனை மகிமையும்,
மகத்துவமும் வாய்ந்த கண்கள் பன்னிரண்டில், ஒன்றினது கடைகண்
பார்வையை என் மேல் சில வினாடிகளேனும் விழ செய்வதால்
தங்களுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டுவிட போகிறது என்று சங்கரர்,
செந்திலாண்டவனை பார்த்து வினவுகிறார். அவனுடைய, அந்த
கடைகண் வீச்சில், சில நொடிகளேனும் சிக்கிக் கொள்ளும்
பாக்யம் கிடைத்து விட்டால், வேறெதையும் தேடித் திரிய வேண்டியதில்லை. பொல்லன போய், நல்லன அனைத்தும்
நம்மை தேடி வந்தடையும்.

சுப்ரமண்ய புஜங்கம்

    ஸ்லோகம் 16 விரும்பியதை அடையலாம்.

   " ஸுதாங் கோத் பவோ மே(அ )ஸி ஜீவேதி ஷட்தா
       ஜபன் மந்த்ர மீசோ முதா ஜிக்ர தே யாத்
    ஜகத் பார ப்ருத்ப்யோ ஜகந்நாத தேப்ய:
       கிரீடோ ஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய: "

 ' மகனே, எனது தேகத்தினின்றும் தோன்றினாய், நீண்ட காலம்
ஜீவித்திரு '. எனும் மந்திரத்தை ஆறுமுறை ஜபித்தவாறு, பரமசிவன்
எந்த தலைகளை முகர்ந்து மகிழ்கின்றாரோ, அவைகள் உலகங்களை காப்பவைகளாக, கிரீடங்களுடன் பிரகாசிக்கின்றன. ஓ ஜகன்நாதா,
அவ்விதமான தங்களது தலைகளை நமஸ்கரிக்கின்றேன

கொஞ்சு மொழிக் குழந்தை, முருகனின் குஞ்சு முகத்தில் மலர்ந்து
மயக்கும், புன்முறுவலுக்கு விஞ்சியது எதுவும் இல்லை. முருகனை
குழந்தையாக, பாவித்து கொஞ்சி விளையாடிக் கிரங்கும் பக்தர்கள்
அடையும் ஆனந்தத்துக்கு எல்லையும் இல்லை, ஈடும் இல்லை.
தனது தேகத்தினின்றும் தோன்றிய மகன் முருகன் தலைகளை,
பெருமிதத்துடன் ஆறுமுறை மந்திரம் ஜபித்து, நீண்ட காலம்
ஜீவித்திருக்க வேண்டும் என்று உச்சி முகர்ந்து ஆசிர்வதித்து
மகிழ்கிறார், தந்தை பரமசிவன்.இத்தகு மகிமை வாய்ந்த முருகனின்
தலைகள், கிரீடங்கள் தரிக்கபட்னவாக அகிலங்கள் அனைத்தையும்
காப்பாற்றிக் கொண்டிருப்பவைகளாக பிரகாசிக்கின்றன.
திருமுருகனை தரிசித்தவாறு, தலைகள் ஆறுக்கும், சங்கரர் இவ்வாறு
தனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறார். பாதங்களில்
தொடங்கி, தலைகள் வரை வர்ணித்து வழிபட்ட, சங்கரர் இந்த
ஸ்லோகத்தில், விஷ்ணுவை சிறப்பிக்கும் ' ஜகன் நாதா ' என்ற
பெயரால் முருகனை அழைக்கறார்.எங்கும் வியாபித்திருக்கும்
பரம்பொருளை விஷ்ணு என்று அழைப்பது போல, முருகனின்
சிறப்பு பெயரான சுப்ரமண்யன் என்றும் அழைக்கலாம். அதாவது
ஒரே பரப்ரம்மம் கண்ணன் கந்தன் என்று பல்வேறு வடிவங்களுடன்
இயங்கிக் கொண்டிருக்கிறது. செந்திலாண்டவனை ' விராட்புருஷனாக '
சங்கரர் வர்ணித்து வணங்குகிறார். முத்தொழி லாற்றும்,முதல்
பொருளாம், ஆதிமூல சதாசிவ மூர்த்தியவன் என்ற அகத்தியர்
பேர்கள் எல்லாம், அவன் பேர்களன்றோ சொல்லும் பேதமெலாம்
வெறும் வாதமன்றோ என்று கூறுகிறார். செந்திலாண்டவன்
கோயிலில் திருமாலுக்கு தனி சன்னதி இருக்கிறது. இந்த ஸ்லோகத்தை
மட்டும் ஜபித்துவர விரும்புவன எல்லாம் கிடைக்கும். குழந்தை
பாக்யம் வேண்டுவோர் இந்த ஸ்லோகத்தை அவசியம் ஜபித்து
முருகனை குழந்தையாக பாவித்து வழிபட வேண்டும்.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 17 சத்ருபயம் நீங்கும்

 " ஸ்புரத் ரத்ன கேயூர ஹாராபி ராம
     ச்சலத் குண்டல ஸ்ரீ லஸத் கண்ட பாக:
 கடௌ பீதவாஸா: கரே சாரு சக்தி:
     புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ: "

ஒளி வீசும் ரத்ன தோள்வளை, மேலும் நல்முத்து மாலை இவற்றால்
அழகு வாய்ந்தவனாய், அசைந்தாடும் குண்டலங்களின் காந்தியால்
மின்னுகின்ற கன்னங்கள் கொண்டவனாய், இடுப்பில் பீதாம்பரம்
தரித்தவனாய், கையில் அழகிய வேலை பிடித்துக்கொண்டிருப்பவனாய்,
திரிபுரம் எரித்த சிவனின் மைந்தன் எனக்கு முன்னால் தோன்ற
வேண்டும்.

இந்த ஸ்லோகத்தில், சங்கரர் தான் விரும்பும் அலங்காரத்துடன்,
வேல் பிடித்தவனாக, திரிபுரம் எரித்த சிவனின் மகன் முருகன்
காட்சி கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். இரத்தினங்கள்
பதித்த தங்க தோள்வளை தரித்துக் கொண்டும், உயர்ந்தரக
நன்முத்துக்களால் கோர்க்கபட்ட மாலை அணிந்து கொண்டும்,
செவிகளில் விளங்கும் அசைந்தாடி கொண்டிருக்கும், மகர குண்டலங்களின் காந்தியால், மின்னும் கன்னங்கள் கொண்டவனாகவும்,
இடுப்பில் பீதாம்பரம் தரித்தவனாகவும், சிவகுமாரன் காட்சி
தந்தருள வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. அக்கணமே
அருளாளன் ஆறுமுகன், அவருக்கு காட்சி தந்தான்.விரோதிகளால்
ஏற்படும் பயத்தை போக்குவதுடன், அவர்களை அடக்கியாளும்
வல்லமையையும், இந்த ஸ்லோக ஜபம் வழங்குகிறது. முருகனை
வழிபடுகின்ற, பக்தர்களுக்கு இது தியான ஸ்லோகமாக அமைந்திருக்கிறது. இந்த ஸ்லோகத்தை மட்டும், நியமத்துடன்
இடைவிடாது ஜபித்து வருபவர்களுக்கு, செந்தில் வேல் முருகன்,
வர்ணிக்கபட்ட அலங்காரத்துடன் தரிசனம் தந்தருள்வான் என்பது
நிச்சயம்.

சுப்ரமண்ய புஜங்கம்

          ஸ்லோகம் 18 ஆனந்தம் அனுபவிக்க.
 
   " இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா
        ஹ்வயத் யாதராத் சங்கரே மாதுரங்காத்
    ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்
        ஹராஸ் லிஸ்ட காத்ரம் பஜே பால மூர்த்திம் ",

' குழந்தாய் இங்கு வா ' என்று கைகளை விரித்தவாறு பரமசிவன்
அழைத்ததும், தாயின் மடியினின்றும் துள்ளித் தாவி தந்தையை
அடைந்தவரும், அவரால் அணைக்கப்பட்டவருமான, குழந்தை
முருகனை வணங்குகிறேன்.

அன்னை பார்வதியின் மடியில் குதூகலத்துடன் தவழ்ந்து
விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை முருகனை கண்டதும்,
தந்தை பரமசிவனுக் கு ஆனந்தம் பொங்கித் ததும்புகிறது.
ஆவலுடன் கைகளை நீட்டியவாறு அழைத்ததுமே, முருகனும்
தாவிக்குதித்து தந்தை சிவனை அடைந்து அவரால் அணைத்து
கொள்ள படுகிறான். அன்பே வடிவான சிவனுக்கு ஆனந்தம்
மென்மேலும் அதிகரிக்கிறது. இது போன்ற சமயங்களை தவிர
மற்ற எல்லா நேரங்களிலும், தாயின் மடியில் தான் முருகன்
வீற்றிருப்பான். ' அன்னை மடித்தல பிள்ளை யவன், சச்சிதானந்த
நாட்டுக்கு எல்லை யவன் ' ( அகத்தியர் ), தந்தைக்கும் மகனுக்கும்
இடையிலான பாசபிணைப்பை கண்ணுற்று, சங்கரரும் முருகனை
வணங்கி மகிழ்கிறார்.குழந்தை முருகனை, இதயத்தில் இருத்தி,
மிகுந்த பாசத்துடன், பக்தி செலுத்தும் அடியார்களும் சிவன்
அடைவது போல, ஆனந்தம் அடைவார்கள். ' அள்ளி அணைப்பவர்
சொந்தமவன், புகழ் நான்மறை அந்தமவன் ' ( அகத்தியர் ), இந்த
ஸ்லோகத்தை ஜபிக்கின்றவர்கள் எப்பொழுதும் ஆனந்தமாக
இருப்பார்கள்.துக்கங்களுக்கும், துயரங்களுக்குமான காரணங்கள்
கண்டறியபட்டு, களையப்படுகின்றன.

சுப்ரமண்ய புஜங்கம்


   ஸ்லோகம் 19 கர்ம வினை தீருவதற்கு.

   " குமாரேச ஸுனோ குஹ ஸ்கந்த ஸேனா -
        பதே சக்தி பாணே மயுராதி ரூட
    புலிந் தாத்ம ஜா காந்த பக்த்தார்த்தி ஹாரின்
      ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் "

  குமாரா,ஈசன் மகனே, குஹனே, கந்தனே, சேனாபதியே, வேல்
தரித்தவனே, மயில் மேலிருப்பவனே, வல்லியின் நாயகனே,
பக்தர்களின் மனக்கவலைகளை நீக்குகின்றவனே, பிரபுவே,
தாரகனை அழித்தவனே, என்னை எப்பொழுதும் நீ ரக்ஷித்து
கொண்டிருக்க வேண்டும்.

அருள்மிகு திருமுருகனின், சக்திவாய்ந்த பெயர்கள சிலவற்றால்
அவனை அழைத்து, வணங்கும் சங்கரர் தன்னை எப்பொழுதும்
அவன் காப்பாற்றி கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறார். என்றும் பதினாறு வயதே கொண்ட பாலகனாக
விளங்குவதால் குமரன் அல்லது குமாரன் எனப்படுகிறான்.
பரமசிவனின் மகன் என்பதால் சிவகுமாரன். பக்தர்களின் இதய
குகையில் இடம் கொள்வதால் குஹன். வேலும் மயிலும்
இல்லாமல் முருகன் இல்லை. ஆதலால் வேலை கையில்
பிடித்தவாறு மயில் மேல் அமர்ந்தவாறு இருக்கிறான்.வேலாயுதன்,
மயில் வாகனன் என்று அழைக்கப்படுகிறான். வல்லியை கவர்ந்த
வல்லி நாயகம். ஆர்த்திஹரன்,அதாவது அடியார்களின் கவலைகளே
அழிக்கின்றவன்.அனைத்து செல்வங்களும் பெற்றிருப்பதால் பிரபு.
தேவர்கள் படைக்கு தளபதியாக இருப்பதால் ஸேனாபதி.
தாரகாசுரனை சம்ஹரித்ததால் தாரகாரி. இந்த ஸ்லோகத்தில்
காணப்படுகின்ற முருகனுடய பெயர்களால் அவனை அர்ச்சித்து
வழிபடவேண்டும். நம்மை வதைக்கும் கர்ம வினைகள் தீர்ந்துவிடும்.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 20 திவ்ய தரிசனம் கிடைக்க.

   " ப்ரஸாந் தேந்த்ரியே நஷ்ட ஸம்க்ஞே விசேஷ்டே
      கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
   ப்ரயாணோன் முகே மய்யநாதே ததானீம்
     த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹ த்வம் ".

 கண் முதலான இந்திரியங்கள ஒடுங்கி, நினைவிழந்து அசைவற்று
வாயினின்றும் கபம் கக்குகின்றவனாய், பயத்தால் நடுங்கியவாறு
உயிர் விடும் பொழுது, தயாளனே குஹனே என் முன்னிலையில்,
நீங்கள விரைவாக வந்துவிட வேண்டும்.

ஜனனம் மரணம் என்ற நிகழ்வுகள் கால சக்கரத்தில் பிணைக்கபட்டு,
சதா சுழன்றவாறு, வருவதும் போவதுமாக இருந்து கொண்டிருக்கிறது.
அந்த பிணைப்பை அறுத்து, விடுவித்துக் கொண்டு இறைவனுடன்
இணைவதுதான் வாழ்வதன் நோக்கம். ஜீவனுக்கும் அவித்யைக்கும்
உள்ள தொடர்பை துண்டித்து சிரஞ்சீவியாய் பேரின்ப சுவையை
அனுபவிக்க வேண்டும். இந்த குறிகோளில் வெற்றி பெறுவதற்கு
இறை வழிபாட்டை தவிர வேறெதுவும் உதவுவதில்லை.இந்த
ஸ்லோகத்தில், சங்கரர் மரணத் தருவாயில் தவிக்கும் மனிதர்களின்
இக்கட்டான நிலயை எடுத்தரைக்கிறார். கண் முதலான ஐந்து
இந்திரியங்ள் செயலிழக்க தொடங்குகின்றன, வாயினின்றும் கபம்
வெளியேறுகிறது, பயத்தின் காரணமாக உடல் நடுங்கிய வண்ணம்
இருக்கிறது, நினைவுகள் இழக்கப்பட்டு, உடல் அசைவுகளும்
நின்று, அனைத்தும் அடங்கிப் போகின்றன. நம்மை பற்றி நாம்
அறிந்தவைகளும், நம்மை பற்றி நாமே அறியாதவைகளும்,
ஆறுமுகனுக்கு தெரியும். உடலை விடுத்து உயிர் நீங்கும் அந்த
மிகவும் தேவையான தருணத்தில் அனைத்தும் அறிந்த முருகன்
ஒருவனே நமக்கு துணை. ஆதலால் உயிர் விடும் பொழுது,
தயாளனே, குஹனே முருகனே, எனக்கு எதிரில் தாங்கள் விரைவாக
தோன்றி காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 21 எமபயம் நீங்கும்

  " க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷு கோபாத்
       தஹச் சின்தி பிந்தீதி மாம் தர்ஜ யத்ஸு
    மயூரம் ஸமாருஹ்ய மா பைரிதி த்வம்
       புர: சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம். "

  எமதூதர்கள் கோபத்துடன ' பொசுக்கு, வெட்டு, பிள ' என்று என்னை
 அதட்டும் பொழுது, தாங்கள் வேலாயுதத்துடன, மயில் மீதேறிக்
 கொண்டு, ' பயப்படாதே ' என்று சொல்லியவாறு எனக்கு முன்னால்
 சீக்கிரம் வரவேண்டும்.

 இதற்கு முந்தய ஸ்லோகத்தின் தொடர்ச்சியாக, இந்த ஸ்லோகம்
அமைந்திருக்கிறது. மனம் எண்ணங்களை தோற்றுவிக்கிறது.
நாம் அந்த எண்ணங்களை, செயலாக்கி விளைவுகளை சந்திக்கிறோம்.
' தீதும், நன்றும் பிறர் தர வாரா '. அதாவது நமது எண்ணங்களின்
விளைவுகளுக்கு, நாமேதான் பொறுப்பு. எண்ணங்கள் மனத்திரையில்,
பொருத்தமான வடிவங்கள் எடுக்கின்றன.அந்த வடிவங்களும் நமது
சுவாசத்திற்கேற்ப இயங்குகின்றன.கனவுக் காட்சிகள்,கற்பனை
காட்சிகள் எல்லாம் இதில் அடங்கும். எண்ணுகின்றவன், எண்ணுதல்,
எண்ணப் படுகின்றவைகள் எனப்படும் மூன்றும் ஒன்றேஒன்றுதான்.
உபநிடதங்கள் இதைத்தான் 'தத்வமஸி ' என்று கூறுகின்றன
அதாவது, எதை நீ நினைக்கின்றாயோ, அதுவாகத்தான், நீ
இருக்கின்றாய் என்பதே அந்த வாக்கு. மரணத் தறுவாயில்
மனிதன் பயத்தின் உச்ச கட்டத்தில் இருக்கிறான்.பயத்தின் விளை வாக
மனதில், பயங்கர உருவங்கள் எழுகின்றன, அவைகளே எமதூதர்கள.
வெட்டு , பொசுக்கு என்றெல்லாம் அதட்டுகிறார்கள. உண்மையில்
அவ்விதமாக எதுவும் இல்லை. சங்கரருக்கு இது தெரிந்ததுதான்.
நமது நன்மைக்காக இது போன்ற ஸ்லோகங்களை அருளுகிறார்
என்று புரிந்து கொள்ள வேண்டும். எமதூதர்கள் தோன்றுவதற்கு
முன்பே, திரு முருகன் வேலுடன், மயில் மேல் அமர்ந்தவாறு
காட்சி தந்து ஆட்கொள்ள வேண்டும் என்று துதிக்கிறார். விரைவில்
முர்கன் வந்தருள வேண்டும் என்பதே முறையீடு.


சுப்ரமண்ய புஜங்கம்


      ஸ்லோகம் 22 புகலிடம் கிடைக்கும்.

   " ப்ரணம் யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
       ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்த யே(அ) னேகவாரம்
     ந வக்தும் க்ஷமோ (அ ) ஹம் ததானீம் க்ருபாப்தே
        ந கார்யாந்த காலே மனாகப் யுபே க்ஷா "

 பிரபுவே முருகா, தங்கள பாதங்களில் பலமுறை விழுந்து
வணங்கி, மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்கிறேன். கருணை
கடலே, மரணத்தருவாயில், பேசமுடியாத நிலையில், தாங்கள்
என்னை கொஞ்சமும், அலட்சியம் செய்துவிடக் கூடாது.

இதற்கு முந்தய இரண்டு ஸ்லோகங்களின் தொடர்ச்சியாகத்தான்
இந்த ஸ்லோகமும் அமைந்திருக்கிறது. அறிந்து செய்தவைகள்,
அறியாது செய்தவைகள், என்று பல்வேறு தவறுகளை செய்த
வண்ணம் இருக்கிறோம். பகுத்தறியும் குணம் கொண்டவர்களாக
இருப்பதால், எப்படி நியாயப்படுத்தி பார்த்தாலும், மனம் நிம்மதி
அடைவதில்லை. தவறுகள் தவறுகள்தான். விளைவுகளை
சந்தித்துத்தானக வேண்டும். தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டுவதே
சிறந்த பிராயசித்தம். மனமுறுகி, கண்களில் நீர்மல்க, கருணை
கடலாம் செந்திலாண்டவன், திருப்பாதங்களில், விழுந்து விழுந்து
மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும், மீண்டும் வேண்டிக் கொள்ள
வேண்டும். அடியார்களிடம் அன்பு காட்டும் முருகன், அவர்களது
வேண்டுதலை புறக்கணிப்பதில்லை. மரணம் நெருங்கிக்
கொண்டிருக்கும் பொழுது, வாய் பேசாத நிலையில், முருகா தாங்கள்
என்னை சிறிதளவும் அலட்சியம் செய்து விடாதீர்கள் என்று
சங்கரர் வேண்டிக் கொள்கிறார்.

சுப்ரமண்ய புஜங்கம்

      ஸ்லோகம் 23 கவலைகள் நீங்குவதற்கு.

   " ஸஹஸ் ராண்ட போக்தா த்வயா சூரநாமா
       ஹதஸ்தாரக: ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய:
    மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன: க்லேச மேகம்
       ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாமி ",

  ஆயிரம் பிரமாண்டங்களை, ஆண்ட சூரபத்மன், தாரகன். சிம்ம
வக்த்ரன் என்ற அசுரர்கள, தங்களால் கொல்லப் பட்டார்கள். எனது
இதயத்தில் இருக்கின்ற, மனக்கவலையை மட்டும் கொல்லவில்லையே.
பிரபுவே முருகா, நான் என் செய்வேன் எங்கு போவேன்.

எந்த ஒரு செயலுக்கும், காரணம் என்று ஒன்று இருந்து தான்ஆக
வேண்டும். அந்த காரணத்தினால் விளைந்த செயல்தான் , பிறிதொரு
செயலுக்கு காரணமாக அமைகிறது. இந்த காரண காரிய விதிதான்
நீண்ட தொடர் கதை போல நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இதை
நன்கு சிந்தித்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எத்துனையோ
வகையான கவலைகள், மனதில் புகுந்து கொண்டு வாட்டிவதைத்து
இதயத்தை கலங்கடிக்கின்றன. ஆயிரமாயிரம் பிரமாண்டங்களை
ஆண்ட சூரபத்மன், தாரகன், சிம்மவக்த்ரன் என்ற அசுரர்களை
கொன்று தேவர்களை விடுவித்து, மாபெரும் வீரச்செயல்கள்
புரிந்த முருகன், தனது இதயத்தில் இருக்கும் மனக்கவலைகளை
மட்டும் கொல்லாமல் இருக்கின்றானே என்று வருந்துகிறார்.
இவ்விதம் வாளாவிருப்பின், பிரபுவே முருகா, நான் என்ன செய்வேன்
எங்கே போவேன் என்று செந்திலாண்ட வனை, கண்ணுற்றவாறு
தனது இயலாமையை, தெரிவித்துக் கொள்கிறார். இந்த ஸ்லோகத்தை
ஐபிக்கின்றவர்கள், கவலைகளினின்றும் விடுவிக்கபடுகின்றார்கள் .


சுப்ரமண்ய புஜங்கம்

     ஸ்லோகம் 24 மன நோய் நீங்கும்.

      " அஹம் ஸர்வதா துக்க பாரா வஸந்நோ
         பவான் தீனபந்துஸ் த்வ தன்யம் ந யாசே
      பவத் பக்திரோதம் ஸதா க்லுப்த பாதம்
         மமாதிம் த்ருதம் நாஸய உமாஸுத த்வம்."

  உமையாள் மைந்தனே, முருகா நான் எப்பொழுதும் துக்க சுமையால்
பீடிக்கபட்டவனாக இருந்து கொண்டிருக்கிறேன். தீனபந்துவான
தங்களை விடுத்து, பிறரிடம் யாசிக்க மாட்டேன். தாங்கள், பக்திக்கு
இடையூறு செய்கின்றதும், எப்பொழுதும் தொந்தரவு கொடுத்து
கொண்டிருப்பதுமான எனது மனக்கவலையை நாசம் செய்ய
வேண்டும்

துக்கங்கள், துயரங்கள், மனக்கவலைகள், மன நோய்கள் என்ற இந்த
பீடிப்புகளிலிருந்து, காப்பாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும்
சங்கரர் வேண்டுவதிலிருந்து, எத்துனை அவசியமான, முக்கியமான
பிராத்தனை இதுவென அறிந்து கொள்ளவேண்டும். கஷ்டங்கள்
நஷ்டங்கள் எனும் காரணங்களால் வேதனை படுகின்ற மனம்,
அதிலேயே ஆழ்ந்து விரக்தி கொள்கிறது. இறை வழிபாட்டிற்கு
பெரும் தடையாக அமைவதுடன், தீய பாதைக்கு வழி காட்டுகிறது.
ஏழை எளியவர்களிடம்,பேரன்பு கொண்டு உற்ற தோழனாக
விளங்கும் முருகனிடம், மனதை நிபந்தனையின்றி கொடுத்துவிட
வேண்டும். இடைவிடாது செலுத்தும் பக்திக்கு மெச்சி, முருகனும்
நமது தேவைகளை அறிந்து, அருள் புரிவான். எப்பொழுதும்
தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும் மனக்கவலைகளை
நாசம் செய்திட,முருகா தங்களால் தான் இயலுமாதலின், வேறெவரிடமும் யாசிக்கமாட்டேன் என்று சங்கரர் வேண்டிக்
கொள்கிறார். எளிதில் மனதில் பதிய வைத்துக் கொள்ளக்கூடிய
அருமையான ஸ்லோகம். இதை ஜபிக்கின்றவர்கள், கவலைகள்
நீங்கப்பெற்று மகிழ்சியுடன் வாழ்வார்கள்.

சுப்ரமண்ய புஜங்கம்

      ஸ்லோகம் 25 தீராப்பிணி தீருவதற்கு.

   " அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச்: ப்ரமேஹ
     ஜ்வரோன்மாத குல்மாதி ரோகா மஹாந்த:
   பிஸாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
     விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே."

தாரகனை கொன்றவரே, காக்கை வலி குஷ்டம், க்ஷயம்,மூலம்,
மூத்திர ரோகம், காய்ச்சல், பைத்தியம்,வயிற்றுவலி, போன்ற பெரும்
ரோகங்கள் மற்றும், பிசாச உபத்திரவங்கள், தங்கள் பாதங்களில்
வைத்து கொடுக்கப்படும், பன்னீர் இலை விபூதியைக் கண்டு
பயந்து ஓடிவிடுகின்றன.

இதற்கு முந்தய ஸ்லோகங்களில், மனக்கவலைகள் மாய்ந்திட
மால் மருகன், முருகனை இறைஞ்சி வேண்டினோம். சிலபல
கொடூரமான வியாதிகள் நம்மை தாக்கி வருத்திக் கொண்டிருக்கின்றன.
காக்கைவலி, குஷ்டம், க்ஷயம், மூலம், மூத்திர ரோகம், காய்ச்சல்,
பைத்தியம், வயிற்றுவலி போன்ற ரோகங்கள் பெரும் துன்பத்தை
கொடுக்கின்றன. பூத, பிரேத, பிசாசங்களால் விளையும் தீங்குகளால்
அவதியுறும்,மனிதர்கள் படும் பாடு மிகவும் பரிதாபமானது. சென்ற
பிறவிகளில், செய்த பாவங்களின் விளைவுகள் தான், தற்பொழுது
நோய்களாகவும், அமானுஷ்ய சக்திகளால் உண்டாகும் தீங்குகளாகவும்,
நம்மை பாதித்து பலவிதமாக வருத்திக் கொண்டிருக்கின்றன.
மருத்வதுறையில், வெகுவாக முன்னேறியிருக்கிறோம். ஆராய்சிகளும்
தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. ' ஆயினும கர்ம வியாதிகளை ' முழுதும் குணப்படுத்தி விடுமளவுக்கு, இன்றய மருத்துவத்தில்
வழி இருப்பதாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அது
ஏழை எளியவர்களுக்கு எட்டாக் கனியாகத்தான் இருக்கும். அடியார்கள்
துயரங்களை அறவே நீக்கிவிடும் செந்திலாண்டவன் திருவருள்
ஒன்றுதான் சிறந்த வழி. திருச்செந்தூரில் முருகனது பாதங்களில்
அர்ச்சிக்கப்பட்ட திருநீறை, பன்னீர் இலையில் வைத்து, மடித்து
பிரசாதமாக கொடுப்பது, நெடுங்காலம் தொட்டு வழக்கத்தில்
இருந்து வருகிறது. அனைத்து ரோகங்களும், பிசாச உபத்திரவங்களும்
பன்னீர் இலை விபூதியை, கண்டு பயந்து ஓடி விடுகின்றன என்று,
முருகனை பார்தவாறு சங்கரர் கூறுகிறார். இந்த ஸ்லோகத்தை
அனைவரும் அவசியம் ஜபித்து வரவேண்டும் தீராப்பிணிகள்
யாவும் தீர்ந்துவிடும்.


சுப்ரமண்ய புஜங்கம்


      ஸ்லோகம் 26 சரணடைதலின் நற்பலன்.

   " த்ருஸி ஸ்கந்தமூர்த்தி: ஸ்ருதௌ ஸ்கந்த கீர்த்தி:
      முகே மே பவித்ரம் ஸதா தத் சரித்ரம்
     கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
         குஹே ஸந்து லீனா மமா சேச பாவா : "

எனது கண்களில் கந்தன் உருவங்களும், காதுகளில் அவனது கீர்த்தியும்,
முகம் அவனது சரித்திரத்தை பிரதிபலிக்கும் பாவனைகளாகவும்,
கைகள் அவனை அர்ச்சிக்கவும், உடல் அவனுக்கு பணிவிடை
செய்தலுக்கும் என்றவாறு அனைத்தும் அவனிடம் லயித்து
விடட்டும்.

அழகு முருகனின் விதவிதமான வடிவங்களை கண்டு ரசிப்பதற்காகவே
கண்களையும், வீரதீர செயல்கள் புரிந்து வெற்றி வேலனாய் விளங்கும்
அவனது புகழை விவரிக்கும் வரலாற்றை கேட்டு மகிழ்வதற்காகவே
காதுகளையும் நாம் பெற்றிருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும்.
கைகள் அவனை வணங்குவதற்கும், அர்ச்சனைகள் செய்து அவனை
மகிழ்விப்பதற்கும், மற்றும் முழு உடலும் அவனுக்கு பணிவிடைகள்
செய்வதற்கும் நாம் பெற்றிருப்பதாக நினைக்க வேண்டும்.நமது
முகமோ அவனது பாவனைகளை பிரதிபலிப்பதாக கருத வேண்டும்.
இவ்வாறாக நமதுஉடல், பொருள், ஆவி என்ற அனைத்தையும்,முருகனிடம் சமர்ப்பித்து விட்டு, அவனிடம் லயத்தை அடையவேண்டும்.
மாற்று கருத்துக்களுக்கு இடம் கொடாமல், அசைக்க முடியாத
நம்பிக்கையுடன் அவனை சரணடைந்திட வேண்டும். இவ்விதமாக
சிந்தித்தவாறு, இந்த ஸ்லோகத்தை ஜபித்து வருகின்றவர்கள்
முருகனாகவே ( சாயுஜ்யம் ) ஆகிவிடுவார்கள்.

சுப்ரமண்ய புஜங்கம்


      ஸ்லோகம் 27 வரமருளும் வள்ளல்.

   " முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா-
       மபீஷ்ட ப்ரதா: ஸந்தி ஸர்வத்ர தேவா:
   ந்ருணாமந்த்ய ஜானா மபி ஸ்வார்த் ததானே
      குஹாத் தைவ மன்யம் ந ஜானே ந ஜானே ",

.முனிவர்களுக்கும், பக்தி செலுத்தும் மனிதர்களுக்கும், விரும்புவன
வழங்க எங்கும் தேவர்கள் இருக்கின்றார்கள். தாழ்ந்த ஜாதி மனிதருக்கும்,
வேண்டுவன வழங்குவதில், குஹனை தவிர வேறு தெய்வத்தை
நான் அறியவே இல்லை.

தன்னிடம் உண்மையான நம்பிக்கையுடன் பக்தி செலுத்துபவர்கள்,
எவராயினும், பாரபட்சம் எதுவுமின்றி, அவர்கள் கோரிக்கைகளை
பூர்த்தி செய்தருளுவதில், முருகன் தனித்தன்மை கொண்ட தெய்வம்.
தாழ்ந்த ஜாதியினன்,உயர்ந்த ஜாதியினன் என்றெல்லாம் பேதம்
பார்க்காமல், பக்தியில் மகிழ்ந்து அவர்கள் வேண்டும் வரங்கள் தரும்
வள்ளல். திருச்செந்தூருக்கு அருகில் ஆத்தூர் என்ற கிராமம் உள்ளது.
தாமிரபரணி ஆறு கடலுடன் கலந்திடும் இடம். முன்னொரு காலத்தில்,
ஆத்தூரில் வாழ்ந்த, மிகவும் தாழ்ந்த வகுப்பினை சேர்ந்த, முருகனிடம்
தீவிரமாக பக்தி செலுத்திவந்த, ஒருவனுக்கு முருகன் காட்சி தந்து
ஆட்கொண்ட வரலாறு, இன்றும் பேசப்படுகிறது.முனிவர்களுக்கோ,
அல்லது இறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களுக்கோ
வேண்டுவன வழங்கும் தெய்வங்கள் எங்கும் இருக்கிறார்கள.
ஆனாலும் தாழ்ந்த ஜாதியினருக்கும், கோரும் வரங்கள் கொடுப்பதில்
குஹன் முருகனை தவிர வேறு தெய்வங்கள் இருப்பதாக நான்
அறிந்தேன் இல்லை என்று சங்கரர் வியந்து போற்றுகிறார். நம்மிடம்
உள்ள குறைபாடுகளை, மனதில் கொள்ளாமல், எல்லாம் எனக்கு நீயே
என்று முருகனிடம் பக்தி செலுத்த வேண்டும். இந்த ஸ்லோகத்தை
ஜபிக்கின்றவர்கள் விரும்பியதை விரைவில் அடைவார்கள்.

சுப்ரமண்ய புஜங்கம்


     ஸ்லோகம் 28 இல்லற வாழ்வு நலமுடன் தொடரும்.

      " களத்ரம் ஸுதா பந்துவர்க: பசுர்வா
        நரோ வாத நாரீ க்ருஹே யே மதீயா:
      யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்
        ஸ்மரன் தச்ச தே சந்து ஸர்வே குமார."

  முருகா குமார, எனது வீட்டிலிருக்கும் மனைவி, புத்திரர்கள, பந்துக்கள்,
பசுக்கள், மற்றுமுள்ள ஆண்கள பெண்கள அனைவரும் தங்களை
பூஜிக்கின்றவர்களாகவும், வணங்குகின்றவர்களாகவும், தியானம்
செய்கின்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

முருகா ,உனது தீவிர பக்தனாக நான் இருந்து வருகிறேன்.எனது
இல்லத்தில் இருக்கும் எனது மனைவி, புத்திரர்கள்,புத்திரிகள்.
நெருங்கிய உறவினர்கள். மற்றுமுள்ள ஆண்கள், பெண்கள், பசுக்கள்
எல்லோரும் கூட, உன்னிடம் பக்தி செலுத்துகின்றவர்களாக
ஆகிவிட வேண்டும். அவர்களனைவரும் உன்னை ஆர்வமுடன்
வழிபடுகின்றவர்களாகவும், தியானிக்கின்றவர்களாகவும் மாறிவிட
வேண்டும். அனைவரின் குல தெய்வமாக முருகனே விளங்க வேண்டும்.
இந்த பிராத்தனையால், மகிழும் முருகன் குடும்பத்தினர் அனைவரையும்,
தனது பக்தர்களாக, அவனே ஆக்கிவிடுவான். இந்த ஸ்லோகத்தை
ஜபித்து வந்தால் இல்லற வாழ்வு, இடையூறுகள் இல்லாமல்,
நலமுடன் தொடரும்.

சுப்ரமண்ய புஜங்கம்

      ஸ்லோகம் 29 நோய்கள் நீங்குவதற்கு.

    " ம்ருகா: பக்ஷிணோ தம்ஸகா யே ச துஷ்டா:
        ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
    பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னாஸ் ஸுதூரே
         விநஸ்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச ஸைலே "

  பொல்லாத மிருகங்கள், பறவைகள், ஈக்கள மற்றும் உடலை
பாதித்துக் கொண்டிருக்கும் கொடிய நோய்கள், இவையனைத்தும்,
கிரௌஞ்ச மலையினை தூளாக்கிய, முருகா தங்களது வேலின்
( சக்தி ) கூர்மையான நுனியினால் குத்தப்பட்டு, வெகுதூரம் கடந்து
போய் நாசத்தை அடைய வேண்டும்.

ஊழ்வினை பயனாக தாக்கிய நோய்கள், தீயசெயல்களால் நாமாக
வரவழைத்துக் கொண்ட நோய்கள் என்றவாறு எத்துனையோ
நோய்களால் வருந்திக் கொண்டிருக்கிறோம். கொடிய மிருகங்கள்,
கடும் பறவைகள், விஷ வண்டுகள், ஈக்கள், கொசுக்கள் மற்றும்
தேள் போன்ற கொட்டும் பூச்சிகள, பாம்புகள் என்ற இவைகளாலும்
நமக்கு தீங்குகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அன்னை பராசக்தியால்
வழங்கப்பட்ட, முருகன் கையாளும் வேல் அபார சக்தி வாய்ந்த
ஆயுதம். முருகன் வீசியக் கணமே, வேலின் கூர்மையான நுனி
பட்டு, கிரௌஞ்சமலை தூள்தூளானது. எனது உடலை பீடித்து
வருத்திக் கொண்டிருக்கும் நோய்கள், மற்றும் மிருகங்கள், பறவைகள்,
விஷ பூச்சிகள், என்பவைகளால் விளையும் தீங்குகள் என்பனயாவும்,
கந்தனே தங்களது வேலினால் குத்தப்பட்டு, வெகு தூரத்திற்கு
அப்பால் போய், நாசத்தை அடைய வேண்டும் என்று சங்கரர்
வேண்டிக் கொள்கிறார். இந்த ஸ்லோகம் மிகவும் சக்தி வாய்ந்தது.
வேலின் மகிமையே வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்லோக ஜபம்
ஒன்றே அனைத்து துன்பங்களையும் நீக்கிவிடும்.

சுப்ரமண்ய புஜங்கம்


      ஸ்லோகம் 30 குற்றங்கள் பொறுத்து அருளுதல்.

 " ஜநித்ரி பிதா ச ஸ்வ புத்ரா பராதம்
     ஸஹேதே ந கிம் தேவஸேனாதி நாத
  அஹம் சாதி பாலோ பவான் லோக தாத:
     க்ஷமஸ்வா பராதம் ஸமஸ்தம் மஹேச: "

 தேவசேனாதிபதியே, முருகா, தாயும் தந்தையும், தங்களது குழந்தைகள்
புரியும் குற்றங்களை, சகித்துக் கொள்கிறார்கள் அல்லவா? நான் மிகச்
சிறிய குழந்தை. தாங்களோ உலகங்களுக்கெல்லாம் தந்தை. மிகவும்
சிறந்த தெய்வமாகிய தாங்கள் எனது குற்றங்கள் அனைத்தையும்
பொறுத்துக் கொண்டு அனுக்ரஹிக்க வேண்டும்.

குழந்தைகள் செய்யும் தவறுகளை, பெற்றோர்கள் பொறுத்துக் கொள்வது,
மனிதர்களாகிய நம்மிடம் காணப்படும் சிறந்த பண்பு. தேவர்களுக்கு
தேவனாகவும், அவர்கள் படைக்கு தலைவனாகவும், உலகங்களுக்கு
எல்லாம் அன்புத் தந்தையாகவும் விளங்கும் முருகன் அடியார்களின்
தவறுகளை பொருட்படுத்துவதில்லை.அவர்களை நல்வழி படுத்தி
அருள் புரியும் அன்புள்ளம் கொண்டவன். தெய்வங்களுக்குள் மிகவும்
சிறப்புடன், விளங்கி இயங்கிக் கொண்டிருக்கும் முருகனிடம்,
தனது குற்றங்கள் அனைத்தையும், பொறுத்து கொள்வதுடன்
மன்னித்து அனுக்ரஹிக்க வேண்டும் என்று, சங்கரர் வேண்டிக்
கொள்கிறார். இந்த ஸ்லோகத்தை ஜபிக்கின்றவர்களுக்கு, முருகன்
அருள் பிரசாதம், விரைவில் கிடைத்துவிடும்.

சுப்ரமண்ய புஜங்கம்


               ஸ்லோகம் 31 ஆனந்தப் பரவசம்

     " நம: கேகின சக்தயே சாபி துப்யம்
        நமஸ்சாக துப்யம் நம: குக்குடாய
     நம: ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
        புன: ஸ்கந்தமூர்த்தே நமஸ்தே நமோஸ்து "

கந்தனின் வாகனம் மயிலுக்கு வணக்கம், ஆயுதம் வேலுக்கு வணக்கம்,
மற்றுமொரு வாகனம் மறிஆட்டுக்கு வணக்கம், கொடியாம் கோழிக்கு
வணக்கம், கடலுக்கும் கடற்கரை செந்தூர் நகருக்கும் வணக்கம்.
செந்தில் கந்தவேளே தங்களுக்கும் வணக்கங்கள் பலப்பல.

முருகன் வசிக்கும் இடம், அவனுடன் சம்பந்தப்பட்ட ஆயுதங்கள்,
வாகனங்கள் என்ற அனைத்திலும் அவனது சானித்யம் விளங்குவதால்,
வணங்குவதற்குரியனவாக ஆகின்றன.வாகனங்களாக ஆடும் மயிலும்
சேவை செய்கின்றன. பெரும்பாலும் மயில் வாகனத்தில்தான் முருகன்
காட்சி கொடுக்கிறான். பஞ்சபூதங்களில் அக்னிக்கு வாகனமாக ஆடு
விளங்குகிறது. அக்னியில் தோன்றி அக்னியாகவும் இருப்பதால்
ஆடும், முருகனுக்கு வாகனமாக எப்பொழுதேனும் செயல் படுகிறது.
அசுரர் கூட்டத்தை அழித்து, ' வெல்லும் செஞ்சேவல் பதாகை உயர்த்திய
வீரன் ' ஆகையினால் ஆடு, சேவல், மயில் வேல் எனும் இவைகளுக்கு
தனது வணக்கத்தை தெரிவிப்பதோடு, கடற்கரைக்கும், திருச்செந்தில்
நகருக்கும் வணக்கங்களை, சங்கரர் தெரிவிக்கிறார். முருகனையும்
அவனுடன் இணைந்திருக்கும் இடங்கள், ஆயுதங்கள், வாகனங்கள்
என்று எல்லாவற்றையும், போற்றி துதிக்க வேண்டும் என்று சங்கரர்
கருத்து தெரிவிக்கிறார்.





Thursday, 28 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்


               ஸ்லோகம் 32 வெற்றி கூறுதல்

     " ஜயானந்த பூமன் ஜயா பார தாமன்
         ஜயாமோக கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
      ஜயானந்த ஸிந்தோ ஜயா சேஷ பந்தோ
          ஜய த்வம் ஸதா முக்தி தானேச ஸுனோ "

    ஆனந்தத்துக்கு இருப்பிடமானவரே தாங்கள வெற்றியுடன்
விளங்கவேண்டும். அளவில்லா காந்தி உடையவரே தாங்கள்
வெற்றியுடன் விளங்க வேண்டும். நற்பலன்கள் நல்கும் புண்ணிய
சரித்திரம் பெற்றிருப்பவரே தாங்கள் வெற்றியுடன் விளங்க
வேண் டும். ஆனந்தத்தை வெளிப்படுத்தும் தோற்றம் கொண்டவரே
தாங்கள் வெற்றியுடன் விளங்க வேண்டும் . ஆனந்த கடலே,
அனைவருக்கும் உறவானவரே தாங்கள் வெற்றியுடன் விளங்க
வேண்டும். முக்தி அருளும் ஈசனின் மைந்தனே தாங்கள்
வெற்றியுடன் விளங்க வேண்டும.

ஆதி சங்கர பகவத் பாதாள், தனது துயரம் நீங்குவதற்காக, செந்தில்
முருகன் சன்னதியில், பக்தியினால் மனமுறுகிப் பாடிய பத்யமான,
ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் வியன்மிகு சக்தி வாய்ந்த மந்திர சாஸ்திரமாக
போற்றபடுகிறது. இலக்கண சுத்தத்துடன் கவிதைகள் இயற்றும்
அறிவை அடைகிறோம். பாமாலை சூட்ட தொடங்கியதுமே, முருகனின்
பாதத்தாமரைகளின் தரிசனம் கிடைக்கப் பெறுகிறோம். திருக்கயிலாய
தரிசன பலன் கைகூடுகிறது. இவைகளின் விளைவாக, பிறவிப்பிணி
நீங்கி, பாபங்கள் அகன்று, மனம் நிறைவுற்று புறத்தூய்மையுடன்
அகத்தூய்மையும் ஏற்படுகிறது. ஆகாம்யம் என்று கூறப்படும்
வரவிருக்கின்ற பாபங்களும் விலகி, மெஞ்ஞானம் ஏற்படுகிறது.
தாபங்கள் நீங்குவதால் பல்வேறு சித்திகளை பெறுவதுடன்
விரோதிகளும் வெல்லப்படுகிறார்கள்.பேரானந்தப் பெருக்கில்
திளைத்து, முருகனிடம் கலந்து விடுகிறோம். அனைத்து கவலைகளும்
அழிsந்து விடுகின்றன. மரண பயம் உண்டாவதில்லை. விஷங்களின்
நீக்கம், மனநோய்களின் முடிவு, ஆரோக்ய வளர்ச்சி, ஆயுள் விருத்தி
எனும் அனைத்து நன்மைகளையும்,கருணைக் கடல் முருகன்
அருளால் அடையப் பெறுகிறோம்.அருள்மிகு திருமுருகன்
ஆதி அந்தம் இல்லாதவன். காலத்துக்கு காலமாய், காலம் கடந்து அப்பாலும் இருக்கும் ஆனந்த ஜோதி. இத்துனை மகத்துவம் வாய்ந்த
முருகன், எப்பொழுதும் வெற்றிப் பெருக்குடன் விளங்க வேண்டும்
என்று இந்த ஸ்லோகத்தில், சங்கரர் கேட்டுக் கொள்கிறார். இது ஒரு
மங்கள ஸ்லோகம். சந்தம் அறிந்து பாடியவாறு, ஆரத்தி எடுக்க
வேண்டும். அனைத்திலும் வெற்றி பெற ஜபிக்க வேண்டும்.

சுப்ரமண்ய புஜங்கம்.


சுப்ரமண்ய புஜங்கம்
        ஸ்லோகம் 33 வாழ்த்து.

      " புஜங் காக்ய வ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய:
          படேத் பக்தி யுக்தோ குஹம் ஸம்ப்ரணம் ய
      ஸ புத்ரான் களத்ரம் தனம் தீர்க்கமாயூர்
         லபேத் ஸ்கந்த ஸாயுஜ்ய மந்தே நரஸ் ஸ: "

    புஜங்கப்ரயாதம் எனப்படும் விருத்தத்தில் ஆக்கப்பட்ட, இந்த துதியை
எவன் பக்தியுடன் பாராயணம் செய்கின்றானோ அவன் புத்திரர்களையும்
பத்தினியையும், தனத்தையும், நீண்ட ஆயுளையும் அடைவான். அவன்
முடிவில் ஸ்கந்த ஸாயுஜ்யத்தையும் அடைந்து விடுகிறான்.

முருகனிடம் பக்தி செலுத்தும் அன்பர்களுக்கு, சுப்ரமண்ய புஜங்கம்
கிடைத்தற்கரிய மாபெறும் பொக்கிஷமாகும்.முதலில் நன்றாக
படித்து புரிந்து கொண்டு பாராயணம் செய்ய தொடங்கவேண்டும்.
நற்குணங்கள் உடைய புத்திரர்கள, சிந்தைக்குகந்த அன்பு காட்டும்
மனைவி, வற்றாத செல்வம், நீண்ட ஆயுள் என்றவாறு எல்லா
நன்மைகளும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.
அனைத்திற்கும் மேலாக, முடிவில் ஸ்கந்த ஸாயுஜ்யமும்
கிடைத்து விடுகிறது.

                 " உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
               மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
               கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
               குருவாய் வருவாய் அருள்வாய் குகனே "
                                                                  ( கந்தர் அனுபூதி )

இத்துடன் சுப்ரமண்ய புஜங்கத்தின் முப்பத்தி மூன்று ஸ்லோகங்களது
உட்கருத்த்களின் தமிழாக்கமும், மற்றும் அவைகளின் விளக்கங்களும்
நிறைவு பெறுகிறது.